பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

உதயணன், வயந்தகன் இருவருமாகக் களைந்தனர். அப்படிக் களையும்போது, மிகுந்த அன்புடன் அதன் மத்தகத்தைக் கைகுளிரத் தடவிக் கொடுத்தான் உதயணன். அப்போது கீழ் வானத்தில் விடிவெள்ளி மேலே எழுந்து தோன்றிக் கொண்டிருந்தது. விடிவதற்கு இன்னும் இரண்டு நாழிகைப் பொழுது இருக்கும். தத்தையும் காஞ்சனமாலையும் துயிலின்றி மிகச் சோர்வாகக் காணப்பட்டனர். “அவர்கள் இருவரையும் இங்கே பக்கத்தில் எங்காவது ஒரிடத்தில் துயிலச் செய்து நீ காவல் புரிக” என்று வயந்தகனுக்கு ஆணை யிட்டுவிட்டு இறந்த பத்திராபதி நற்கதி அடைதற்பொருட்டுச் செய்யவேண்டிய கடன்களைச் செய்யலானான் உதயணன். பக்கத்திலே இருந்த நீர் நிறைந்த அழகிய தாமரைப் பொய்கை யொன்றில் போய் நீராடினான். நீராடியபின் தூய உள்ளத்தோடு தன் வழிபடு தெய்வத்தைக் கருதி நீர்க்கடனையும் நியமக்கிரியைகளையும் செய்து முடித்தான். பின்னர் வயந்தகன் இருக்குமிடம் சென்று தத்தை, காஞ்சனை இவர்களோடு பகற்பொழுதில் மறைந்து வசிப்பதற்கு உரிய ஒர் இடத்தைக் காணவேண்டுமென்று அவனுடன் கலந்து ஆலோசித்தான். உதயணனுடைய இன்ப துன்பங்களில் வயந்தகனுக்கு முற்றிலும் பங்கு உண்டு. அவர்களிடையே இருந்த நட்பு அவ்வளவிற்கு உயர்ந்தது.

உதயணன் கூறியதைக் கேட்ட வயந்தகன், அந்த இடத்தினுடைய நிலையையும் அங்கிருந்து தாங்கள் உடனே புறப்பட்டுச் செல்லவேண்டிய அவசியத்தையும் விவரமாகக் கூறினான். “மனநெகிழ்ச்சி என்பது சற்றளவுமில்லாத கொடு வினை வாழ்க்கையை உடைய வேடர்கள் பயிலும் இடம் இது. அன்றியும் இரண்டு நாடுகள் சந்திக்கும் எல்லைத் தானமாகிய இங்கிருப்பது துன்பத்தை வலிதின் அழைப்பது போலாகும். வாசவதத்தை வருந்தினாலும் துன்பத்தைப் பொருட்படுத்தாது மேலே நடத்தலே சரி” என்று வயந்தகன் சொல்லி முடித்தான். உதயணன் காஞ்சனையிடம் அதைக் கூறி நடந்து புறப்படுமாறு வேண்டினான். வாசவதத்தையின்