பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18. நெருங்கிய துன்பம்

கற்பொழுது ஒரு வழியாகப் பொய்கைக் கரையில் அந்த இலவம் புதரிடையே கழிந்துவிட்டது. அழற்குழம்பென மேல்வானம் சிவப்புற அந்திப் பொழுது மெல்ல வந்தது. பறவைகளெல்லாம் பல்வேறு ஒலிகளைச் செய்து கொண்டே தத்தம் கூடுகளை அடைந்தன. பக்கத்துப் பொய்கையில் கதிரவனுக்குக் கைகூப்பி விடை கொடுப்பன போல மலர்கள் குவிந்தன. வயந்தகன், உதயணனை நோக்கி மேலே என்ன செய்யலாம் என்பது பற்றிச் சில விவரங்களைக் கூறினான். “இருட்போது வந்துவிட்டதால், அந்தக் காட்டை அடுத்திருக்கும் உருமண்ணுவாவினால் ஆளப்படும் சயந்தி நகரத்துக்குக் கூடப் போவதற்கில்லை. இருளைப் பொருட்படுத்தாது சென்றால் பல துன்பங்கள் நேரும். தத்தையோ மிகவும் வலுவிழந்து காணப்படுகிறாள். ஆகையால் இப்போது செல்லுதல் நன்றன்று. யான் நாம் நண்பனாகிய இடவகனால் ஆளப்படும் புட்பக நகரம் சென்று, நமது உதவிக்கு ஒரு படையும் பிறவசதிகளும் பெற்றுக் காலையில் வருவேன். அதுவரை நீ இவர்களோடு இங்கேயே இரு” என்று வயந்தகன் கூறிவிட்டுச் சென்றான்.

புட்பக நகரம் புறப்படத் தன்னிடம் விடை பெற்றுக் கொண்ட வயந்தகனை நோக்கி உதயணன் சில கூறினான்: “இடவகனும் யானுமே அறிந்த அடையாளச் செய்தி ஒன்று உண்டு. அதைக் கூறினாலொழிய நின்னை அவன் நம்ப மாட்டான். நீ நம் நிலையையும் நிகழ்ந்த யாவற்றையும் இடவகனிடம் கூறிப் படையுதவியும் பிறவும் பெற்று வரல் வேண்டும். இந் நேரத்தில் நாம் உறுதியாக நாடு திரும்புவது இடவகனிடம் நீ பெற்று வரும் உதவியைப் பொறுத்தே இருக்கிறது” என்று இவ்வாறு உரைத்து, வயந்தகனிடம் அந்த அடையாளச் செய்தியையும் கூறினான் உதயணன். வயந்தகன் உதயணனை வணங்கிவிட்டுப் புட்பக நகரம் புறப்பட்டுச் சென்றான்.