பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நெருங்கிய துன்பம்

83

வயந்தகன் புறப்படும்போது இரவு நேரம் ஆரம்பமாகி விட்டது. வயந்தகனை அனுப்பியபின் உதயணன் தத்தையையும் காஞ்சனையையும் இலவம் புதரின் உட்பகுதியில் நிம்மதியாகத் துரங்குமாறு கூறிவிட்டுத் தான் வெளிப்புறம் காவலாக நின்று கொண்டான். உள்ளே துயிலும் தத்தையின் எழிற் காட்சியில் தன்னுடைய துன்பங்களை யெல்லாம் மறந்தவனாகி இருந்தான் உதயணன். நீண்ட அந்த இரவு முழுதும் அவன் துரங்கவே இல்லை. வலக்கரத்தில் ஏந்திய வாளுடனே பொழுது புலரும்வரை காக்க வேண்டிய கடமை அவனுக்கு இருந்தது. பொழுதும் ஒருவாறு புலர்ந்தது. இலவ மரத்துக் கிளையொன்றிலிருந்த மயில், பச்சோந்தி யொன்று தன்மேல் வாலைச் சுழற்றிக்கொண்டு வருவதுகண்டு கதறுவதுபோலக் கத்திக் கொண்டிருந்தது. கிழக்கே அடிவானம் சிவந்தது. உதயணன் கண்கள் தூக்கத்தால் சுழன்றன. தூக்கத்தை விடுத்துப் பொய்கையில் நீராடிக் காலைக் கடன்களைச் செய்யத் தொடங்கினான் அவன்.

காலைக் கடன்களை முடித்துவிட்டுத் தன் தனிமை நிலையையும் தனக்கு வரிசையாக நேரும் துன்பங்களையும் எண்ணியவாறே புட்பகநகர் போன வயந்தகனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் உதயணன். தத்தையின் சோர்ந்த நிலை கண்டு அவளைத் தேற்றிப் பேணுமாறு காஞ்சனைக்குக் கூறிவிட்டு, வழியோரமாக நகர்ந்து சற்றுத் தொலைவிலிருந்து எங்காவது வயந்தகனது படை வருகிறதா, என்று பார்க்கப் புறப்பட்ட உதயணனை ஒரு தீய நிமித்தம் தடை செய்தது. இலவ மரத்தின் உச்சியிலே அமர்ந்திருந்த வயவன் என்னும் பறவையொன்று பலமுறை கத்தியது. அது குரல் கொடுத்ததிலிருந்து விரைவில் எவரோ பகைவர் படை தன்னை நெருங்க இருக்கிறது என்றறிந்தான் உதயணன். முதன் முதலில் தான் பிரச்சோதனனால் வஞ்சக யானையின் மூலம் சிறைப் பிடிக்கப் படுவதற்கு முன்புங்கூட இதே பறவை கத்திய நிமித்தம் அவனுக்கு நினைவில் எழுந்தது. எதற்கும் முன்னேற்பாடாக இருக்க வேண்டுமென்ற கருத்தினனாய் வில்லைத் திருத்தி அதிற் பொருந்திய அம்புடன் இலவம் புதரின் முன்பு நின்று கொண்டான் உதயணன்.