பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

இஃது இவ்வாறு இருக்கப் பத்திராபதி முன்பு இறந்து விழுந்து கிடந்த வழியோரமாக வந்த கொள்ளையடித்துத் துன்புறுத்தும் தொழிலையுடைய வேடர் சிலர் சந்தேகமுற்று நின்றனர். அந்தப் பகுதியில் மறைந்து வாழ்பவர்களாகிய அவர்கள் வழியிற் செல்லும் வணிகர் கூட்டங்களைக் கொள்ளையடிப்பதும் கொலை செய்வதுமே தொழிலாக உடையவர்கள். சவரர், புளிஞர் என்ற அந்த இருவகை இனத்து வேடர்களும் அன்று காலையில் பத்திராபதியின் அடிச்சுவடு கண்டு, அதைப் பின்பற்றியே பதுங்கிப் பதுங்கி வந்தனர். அடிச்சுவடு கண்டதும் அது ஏதோ ஒரு நாட்டுப் பிடியினுடைய அடிச்சுவடு என்பதும் அவர்களுக்குத் தெரிந்து விட்டது. அதில் சென்றோர் செல்வமிக்கவராக இருக்க வேண்டுமென்றும் அனுமானித்தனர். சுவடு பற்றி வந்த அவர்கள் பத்திராபதி வீழ்ந்து கிடந்த இடத்திற்கே வந்து சேர்ந்தனர். அங்கே ஆடவர் பெண்டிர் கால் அடிகளின் அடையாளங்களையும் கண்ட அவர்கள் சந்தேகம் உறுதிப் பட்டது. அங்ஙனம் சந்தேகந் தோன்றினாலும் யானையில் வந்தவர்கள் இதற்குள் வெகு தொலைவு சென்றிருக்க வேண்டும். ஆகையால் அவர்களிடம் கொள்ளை அடிப்பதற்கு இயலாமற் போயிற்றே என்று வேடர் வருந்தி உரைத்தனர். அவர்கள் கூற்றை மறந்து முதிய வேடனாகிய நிமித்திகன் ஒருவன், பறவை ஒன்றின் ஒலி நிமித்தத்தைக் கேட்டு “நீங்கள் நினைப்பது தவறு. இப் பிடியில் வந்தோர் இங்கேதான் பக்கத்தே ஒரிடத்திலே தங்கியிருக்க வேண்டும. நாம் விரைந்து சென்றால் அவர்களைக் காணலாம். பெரும் பொருள் கொள்ளையாகக் கிட்டும். ஆனால் வீரம் மிக்க ஆண் மகன் ஒருவனுடன் கடினமாகப் போரிட்டே அப் பொருளை நாம் அடைமுடியும்” என்று கூறினான். அவ்வாறு கூறி முடிக்கவும் நெஞ்சில் ஈவிரக்கமற்ற அந்த வஞ்சகர் கூட்டம் ஒன்றுகூடி எழுந்துவிட்டது. பிடிவீழ்ந்த இடத்திலிருந்து செல்லும் ஆடவர் பெண்டிர் அடிச்சுவடுகளை இடை விடாமல் பின்பற்றிய வேடர் இலவம் புதரை நெருங்கி