பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாய யானை

7

மகள் என்றுணர்ந்து, அவர் வியப்போடு அருகிற் சென்று உதவினார். அப்பால் தன் தந்தையாகிய சேடக முனிவரோடு மிருகாபதி குழந்தையுடனே வசிக்கலாயினாள். கையிற் குழந்தையோடும், கருத்தீர்ந்த உடலோய்வுடனும் இருந்த அவளுக்குச் சேடக முனிவரின் நண்பரான பிரமசுந்தர முனிவரும் அவர் மனைவி பரம சுந்தரியும் உதவி செய்து அன்புடன் பேணி வந்தனர். சூரியன் உதயமாகும் நல்ல பொழுதில் பிறந்ததால் அந்தக் குழந்தைக்கு உதயணன் என்று பெயரிட்டார் சேடகர். அவன் தன்னிகரில்லாத பெருந்தலைவனாக வளர்வான் ஆகையினால் அவனது வரலாறு வேறு பலருடைய வரலாற்றுக்கும் காரணமாக விளங்குமென்றார் சேடகர். பலருடைய வரலாற்றையும் - புகழையும் உதிக்கச் செய்வதற்கு அவன் காரணமாயிருப்பானென்றதாலும், உதயணன் என்னும் பெயர் அவனுக்குப் பொருத்தமாயிற்றென்றார் முனிவர்.

விபுலமலைச் சாரலில் அத்தவத்தோர் சூழலில் உதயணன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து தக்கபருவத்தை அடைந்தான். உதயணனுக்குச் சம வயதினனாக, யூகி என்னும் புதல்வன் ஒருவன் பிரமசுந்தர முனிவருக்கு இருந்தான். உதயணனும் அவனும் இணை பிரியாத உயிர்த் தோழர்களாகி இருபெரு முனிவர்களிடமும் பல அருங்கலைகளைக் கற்றுத் தேர்ந்தனர். இருவருக்கும் வாலிபப் பருவம் வந்தது. உதயணனின் கலைத் திறனையும் மதி நுட்பத்தையும் கண்டு அவன்பால் தனி அன்பு கொண்ட பிரமசுந்தர முனிவர், அவனுக்கு இசைக் கலையின் நுட்பங்கள் பலவற்றையும் கற்பித்ததோடு, யானையின் மதத்தை அடக்கி ஆளுதற்குரிய மந்திரத்தையும் விந்தைமிக்க ‘கோடபதி’ என்னும் யாழையும் கொடுத்தருளினார். கோடபதியை வாசித்தால் யானை முதலிய விலங்குகள் யாவும் வாசிப்பவர் வயப்பட்டு அடங்கி, அவரிட்ட ஏவல்களைச் செய்யும். பின்பு பிரமசுந்தர முனிவர் உதயணனை வாழ்த்தித் தம் புதல்வனாகிய யூகியையும் அவனுக்கு அடைக்கலமாக