பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

மூட்டிய தீயைப் புதரைச் சுற்றிலும் இட்டனர் வேடர். ‘தங்களை வேண்டிச் சரணடைய வேண்டும்; அல்லது வைதவண்ணம் உயிர்விட வேண்டும். இவ்விரண்டொழியப் புதரிலுள்ளோர் வேறெதுவும் செய்வதற்கியலாது’ என்று நினைத்தவாறே சிங்கத்தை வளைக்கும் சிறு நரிக் கூட்டம் போலப் புதரை வளைத்துக்கொண்டு வேடர் துன்புறுத்தலாயினர். தீப் புகை சூழ்ந்து புதரினுள்ளே மூச்சுவிடவும் இயலாது போயிற்று. தழைத்துக் கொழித்துப் பூத்து விளங்கிய பூம்புதர் புகைப்படலங்களில் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது. உள்ளே தத்தை காட்டுத் தீயினால் எழுந்த புகையில் அகப்பட்டுக்கொண்டு திக்குமுக்காடும் பெண் மானைப் போல வருந்தினாள். உதயணனின் தனிமை அவள் உள்ளத்தைச் சுட்டது. தன்பொருட்டு அவன் படும் துயர்களின் மிகுதியை அவளால் நினைக்கவும் முடியவில்லை. உள்ளே துயரலைகள் பொங்கி மோதிக்கொண்டிருந்தன. அவள் பெண்மை அவ்வளவு துன்ப மிகுதியைத் தாங்கும் அனுபவத்தைக்கூடப் பெற்றிருக்கவில்லை. தத்தையின் நிலையை அவள் கூறாமலே உணர்ந்துகொண்ட உதயணன், அவளருகில் வந்து அவிழ்ந்துகிடந்த கூந்தலை மெல்லக் கோதியவாறு திருத்தினான். அவள் துயர் தணியச் சில கூறிக் காஞ்சன மாலைக்கு ஒரு பொறுப்பை அளித்தான். “யான் வெளிப் புறஞ் சென்று போர்செய்து வெற்றியுடன் மீண்டு வருகிறேன். அதற்குள் நீங்கள் இருவரும் தீப் பற்றாத ஒரு புறமாக இங்கிருந்து வெளியேறிச் சென்று எங்கேனும் ஒரிடத்தில் ஒளிந்திருங்கள். இவர்களை வெற்றி கொண்ட பிறகு யானும் நீங்களிருக்குமிடம் வந்து சேர்ந்து கொள்வேன்” என்று உரைத்துத் தத்தையைக் காஞ்சனமாலையிடம் அடைக்கலம் போல அளித்தான். ஆனால் இந்த ஆணையைக் காஞ்சனைக்கு இட்டுவிட்டு இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு வெளிப்போந்த உதயணன், இதற்கு அவசியமே இல்லாது போயினதை உணர்ந்தான். அவன் வில்லும் கையுமாக வெளிவந்த வேகத்தைக் கண்ணுற்ற வேடர் இனம், யாளியைக் கண்ட யானை இனம்போலச் சிதறி ஓடிவிட்டது.