பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11

ஆத்திரம் ஊட்டுவதற்குரிய சூழ்நிலையை அறிந்து கொள்ள வேண்டும். அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தது ஏனென்ற நியாய தர்மங்களையும் சீர்தூக்கப் பார்க்க வேண்டும். அப்பொழுது தான் அடங்காது குதித்து ஆத்திரப்படும் மனதை சமாளிக்க முடியும். சமானப்படுத்தவும் முடியும்.

வேறு வழி இல்லை என்று விளங்கிக் கொள்பவர்களால் தான் வாழ்க்கையை சமாளிக்க முடியும். வளர்ச்சியடைய முடியும். மற்றவர்களை விட அதிகமாக முன்னேறவும் முடியும்.

இப்படி உள்ளதை விளங்கிக் கொள்ளாதவர்கள் வாழ்வு எப்பொழுதும் விடிவதேயில்லை. எப்பொழுதும் இருட்டிலேயே வாழ வைத்துவிடும்.

இங்கே தொடங்க இருக்கின்ற ஒரு புது விளையாட்டுத்துறை நாவலுக்குரிய முன்னுரை தான். நீங்கள் இதுவரை படித்து வந்தது. தலைப்பும் ஆத்திரப்படுவதில் அர்த்தமில்லை என்பது தான்.

அர்த்தமில்லாத தலைப்பாக இது இருக்கலாம், அர்த்தமில்லாத விஷயங்கள் கூட இதில் வரலாம். ஆனால் இது நமது விளையாட்டுத் துறையின் நிகழ்காலத்தையும் எதிர் காலத்தில் வரலாறாகக் காட்டும் காலக் கண்ணாடியாகவும் இருக்கும் என்பதற்காக எழுதப்படுகின்ற நாவல் இது.

இதில் வரும் கதாநாயகன் குணசேகர் தனது வாழ்க்கையில் எத்தனையோ வேதனைகளைச் சந்தித்தவர். இங்கே பல சோதனைகளைச் சந்திக்க இருக்கின்றார். கதாநாயகன் என்றவுடன் பழக்கமாகத் தமிழ் நாவல்களில் வரும் 'பாணிகள்' 'பாவனைகள் தோரணங்கள்' 'குடைச்சல்கள்', குமட்டல்கள் காதலர்கள், கவிழ்ப்புகள், மோதல்கள் இதிலிருக்காது.