பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இந்த நாவலைப் படிக்குமுன்

திரு. எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் எழுதிய புத்தகங்களுள் இது தனித்தன்மையைப் பெற்றுத் திகழ்கிறது !

நாவல் தான் இது என்றாலும் தற்காலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் நாவல்களில் இடம் பெறும் காதல், கலாட்டா போன்ற நிகழ்ச்சிகளை சேர்க்காமல் இந்தப் புத்தகத்தை அவர் எழுதியிருப்பது நம்மை நிச்சயம் வியப்பிலாழ்த்தும் !

விளையாட்டுத்துறை நூல்களையும் கதை, கவிதை, நாடக நூல்கள் பலவற்றையும் எழுதியுள்ள இந்நூலாசிரியர் நவராஜ் செல்லையா, தான் சுவீகரித்துக் கொண்டுள்ள விளையாட்டுத் துறையைப் பின்னணியாகக் கொண்டு குணசேகர் என்ற ஒரு கதாபாத்திரத்தையும். அவரைச் சுற்றிப் பலரையும் நமது சிந்தனையில் நிலைக்கும் வண்ணம் உலவவிட்டிருக்கிறார்.

தான் எடுத்துக் கொண்ட முயற்சியில் வெற்றி தோல்வியைக் காணும் ஒரு மனிதனின் மனநிலையை சுவையோடு நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்த ஆசிரியர் கதாபாத்திரங்களை நகர்த்தியுள்ள முறை பிரமிக்க வைப்பதாக அமைந்துள்ளது !

காதல் இல்லாமல், கலாட்டாக்கள் இல்லாமல் ஒரு சுவையான கதையைச் சொல்ல முடியும் என்ற மாயா ஜாலாத்தை நவராஜ் செல்லையா அவர்கள் இந்த நாவலின் வாயிலாக நிரூபித்து , எழுத்துலகத்திற்கு ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை செய்திருக்கிறார்.

அவரது மாறுபட்ட முயற்சியின் சாதனையைப் படித்து சுவைக்க நாங்கள் தடையாக நிற்க மாட்டோம் என்ற உத்திர வாதத்துடன் உங்களை நூலினுள் நுழைய அழைக்கிறோம்.

பதிப்பகத்தார்

.