பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 வெளிச்சத்தை நோக்கி...

புருஷனை தொலைச்சிட்டு, பிழைப்புக்காக எந்த ஆம்புளையையும் பிடிக்கிற 'டைப்' இல்லை."

வாணி கூனிக் குறுகினாள். முன்பு பல சந்தர்ப்பங்களில், மெய்யப்பன் தனக்காக வாதாடி ஆற்றுப்படுத்திய நினைவுகள் நெஞ்சத்தில் கிளம்ப, அப்போதும் அவன் தனக்காய் வாதாட வருவான் என்பதுபோல், அவனைப் பார்த்தாள். அவனோ இன்னும் முடங்கிக் கிடந்தான். வாணி வேறு பக்கமாகத் திரும்பி, கண்களைத் துடைத்துக் கொண்டாள். மானேஜர் தர்மசங்கடமாக நெளிந்தார். 'கிணறு வெட்டினால்... பூதம் கிளம்புதே...'

முனுசாமி இப்போது கம்பீரமாகத் தத்துவம் பேசினான்: "புருஷன் செத்தபிறகு, இன்னொருத்தனைப் பிடிக்கிறதுல தப்பில்ல... அதோட, புருஷனாவது நூறுபேர் முயற்சியில... முன்பின் தெரியாத பெண்ணுக்கு பரிச்சயமாகிறவன்... அவன் போனதும், ஆறுதலுக்கோ அல்லது அவசியத்துக்கோ, ஒருவனைப் பிடிச்சுக்குறதுல தப்பில்ல... ஆனால், நாலுபேருக்குத் தெரியாமல் ஒருவனைக் காதலிச்சிட்டு, அவன்கிட்ட எல்லா உதவியையும் வாங்கிட்டு, அவன் உயிரோட இருக்கும்போதே, அவன் கண் முன்னாலேயே, இன்னொருத்தன்கூட ஒருத்தி போகிறாள் என்றால், அவள் எவன்கூடயும் 'போகத்' தயாராய் இருப்பவள்... காசு இருக்கிற எவனும் அவளை சத்தியமாய் கூப்பிடலாம்."

அலுவலக ஊழியர்கள், அதிர்ந்து நின்றார்கள். முனுசாமி அட்டகாசமாய் பேசுவான் என்றாலும், இப்படி அசத்துவான் என்று எதிர்பார்க்கவில்லை. மானேஜருக்கு நிலைமை புரிந்தது. மானேஜிங் டைரக்டரிடம், விவகாரம் போனால், முதலில் அவர் தலைதான் உருளும் சமாளித்துப் பேசினார்.

"முனுசாமி, நீ நல்லவன். கள்ளங்கபடமில்லாத அப்பாவி என்கிறதுனால இத்தோடு விடுறேன். விமலா! நீங்களும்