பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108 வெளிச்சத்தை நோக்கி...


இத்தியாதிகளுக்கு செலவிட்ட பணம், மெஸ்ஸில் பாக்கியாக நின்றது. சாப்பாட்டுக்காரர், "நான் என்ன சத்திரம் சாவடியா கட்டி வச்சிருக்கேன்" என்று சொல்லி விட்டார்.

இருப்பிடத்திலோ, சத்யாவின் அண்ணி, அவன், தன் மைத்துனியிடம் ரகசியமாய் பேசவில்லை என்று 'பூமியறிய' பொய்ச் சத்தியம் செய்ததால்தான், பலரறியப் பைத்தியமாகி விட்டான் என்று நம்பினாள். சத்யாவிற்கும், அவனுக்கும் ஏதோ ஒன்று இருந்ததாக சந்தேகமில்லாமல் நினைத்துக் கொண்டாள். குளியலறைக்கு அவன் செல்லும் போதெல்லாம், "தடிமாட்டுப் பயலுக... பெரிய அரிச்சந்திரன் மாதிரி, வீட்டைக் காலி செய்யுறதாய் சொல்றது... அப்புறம் பிஸின் மாதிரி ஒட்டிக்கிறது... என்ன மனுஷாளோ..." என்று தினமும் அர்ச்சித்தாள்.

சத்யா, இப்போது தனக்காக அழுவதை விட்டுவிட்டு, அவனுக்காக அழுதாள். அன்று அண்ணன் அடித்தபோது,தான் , அவனை 'நீ... நான் ...' என்று மட்ட மாய் பேசிவிட்டதால்தான், அவன் மனம் பேதலித்துவிட்டது என்று எண்ணி, அதற்குப் பிராயச்சித்தம் செய்ய முடியாமல், அவனைக் காணும்போதெல்லாம், அண்ணிக்குத் தெரியாமல், கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவன் உள்விழுந்த கண்களைப் பார்க்கும்போது, அவளுக்குக் கன்னங்கள் நனைந்தன. அவன் நெற்றியைச் சுழித்தபோது, அவளுக்கு, தன் உயிரே சுழிப்பது போலிருந்தது. அவனுக்காக ஊமை அழுகையில் தேய்ந்தாள். உருக்கத்தில் துவண்டாள். ஒருசில சமயம், அவனைப் பார்த்து திட்டுகிற அண்ணியை, நறுக்குத் தெறித்தாற்போல், நான்கு வார்த்தை கேட்கப்போகும் அளவுக்குக் கோபம் வந்தது. அனாதைகளுக்குக் கோபம் வரலாமா. அதுவே அண்ணிக்கு யோகமாகாதா? அவளைத் துரத்துவதற்கு வாய்ப்புக் கொடுக்குமே.

அன்றொரு நாள், மெய்யப்பன் குளியலறையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான். வைரம் பாய்ந்த உடம்பும்,