பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 115


"ஒங்களுக்கு எத்தனை தடவை சொல்றது... சீக்கிரமாய் போங்க... கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டு, போலீஸ்காரங்கள கையோடு கூட்டிவாங்க... இல்லன்னா... ஒரு நாள்போல், ஒரு நாள் இருக்காது... போலீஸ் பாடு... இவன் பாடு... நாளைக்கு என்னையே கூட கூப்பிடுவான்... யார் கண்டாங்க...?”

கணவன் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறான். அவன் பதில் குரலில், கருணை இல்லையானாலும், நிதானம் ஒலித்தது.

மெய்யப்பன் மெல்ல எழுந்தான். போலீஸ் வருமோ? பத்திரிகைகளில் செய்தி வருமோ? நேற்றிரவு பக்கத்து வீடுகளிலும், சத்யாவின் அண்ணன் கத்தியபோது, விளக்குகள் எரிந்தது மாதிரித் தெரிந்ததே... இனிமேல் அவர்கள் முகத்தில் எப்படி விழிப்பது? அது போகட்டும். போலீஸ் வரும் தெரு வழியாக தன்னைக் கூட்டிக் கொண்டு போவாங்க... பின்னங்கை கட்டப்பட்டாலும் கட்டப் படலாம்... அடித்தாலும் அடிக்கலாம். ஆஸ்பத்திரியில் டாக்டர்களே நோயாளிகளிடம் எரிந்து விழுகிற இந்தக் காலத்தில், போலீஸ்காரர்கள் இந்த நோயாளிக்கு மாலையா போடப் போறாங்க...? மாலையும் விழலாம்... அடிபட்டு செத்துப் பிணமான பிறகு, யாராவது மாலை போடலாம்... அய்யோ போலீஸ் வருமோ... கண்டிக்கவா..? அல்ல... அல்ல... தண்டிக்க! தண்டிக்க! வேற வழி இல்லை... எங்கேயாவது ஓடிப் போகணும்... மனித சஞ்சாரமில்லாத மிருகங்கள் வாழும் காட்டைப் பார்த்து ஓடிப் போகணும். ஓடியே ஆகணும்..."

மெய்யப்பன் எழுந்தான். குளியலறைக்குப் போகப் போவதுபோல் துண்டை எடுத்தான். சத்யா வீட்டில் இன்னும் சத்தம் அடங்கவில்லை. சொல்லுக்கு சொல் போலீஸ் வருகிறது. வார்த்தைக்கு வார்த்தை பைத்தியக்காரன் என்ற பட்டம் கேட்கிறது. மெய்யப்பன் குளியலறைக்குப் போகவில்லை... அங்கு போய் மீண்டும் ரகளை வந்து, அந்த