பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 129

கையெழுத்தையும் போட்டுவிட்டு, தலையெழுத்தை அழிக்க நினைத்தவனாய் மீண்டும் கட்டிலில் ஏறினான். லேசாக.... மரணபயம்... உயிர் போகப் போகிறதே என்பதைவிட, உடல் அவஸ்தைப்படுமே என்ற பயம்... மூச்சைப் பிடித்துக் கொண்டு, அவன் சுருக்குக் கயிற்றைப் பார்த்தபோது-

ஜன்னல் பிய்க்கப்படுவது போல் சத்த மிட்டது மெய்யப்பன் ஜன்னலை நோக்கினான்.

சத்யா, ஜன்னல் கம்பிகளுக்கு இடையில், தன் இரு கரங்களையும் நீட்டி, அவனைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டிருந்தாள். முகம் 'வேண்டாம் வேண்டாம்' என்று இருபக்கமும் ஆடிக் கொண்டிருந்தது. கண்கள் நீர் சொரிந்தபடி, அவனைப் பார்த்துக் கெஞ்சிக் கொண்டிருந்தன.

அவள், 'கீழே இறங்குங்கள்' என்று கரங்களாட, விரல்களை ஆட்டிய விதம், ஒரு தாய், தன் குழந்தையை எடுக்கத் துடிப்பதுபோல் தெரிந்தது. அவள் கண்ணீர்த் துளிகள், அவன் அறைக்குள் பன்னீர்போல் தெறித்தன. அவள் அண்ணி வீட்டில்தான் இருக்கிறாள். பட்டப்பகல் தான். எதிர்வீட்டுக்காரி இவள் ஜன்னலில் குவிவதைப் பார்த்துக் கொண்டுதான் நிற்கிறாள். அவளுக்கும் இது தெரியும். இப்போது, அவனைத் தவிர, எதுவுமே அவளுக்குப் பொருட்டாகத் தெரியவில்லை. அவன் மரணப்படாமலே, மீண்டும் தன்னில் பிறக்க வேண்டும் என்பதுபோல், அவள் துடித்தாள். கருணையின் நோக்கம். தாய்மையின் தாக்கம். பிரசவ வேதனையில் தாய்க்கு, வெட்கம் போய் விடுவது போல், அவளின் நெஞ்சின் கருணைப் பிரசவத்தில், அக்கம் பக்கம் மறந்துவிட்டது. அவனை மீண்டும் கரம் குவித்துக் கும்பிட்டாள். பிறகு, தானும் சாகப் போவதுபோல், கைகளை கழுத்துப் பக்கமாகக் கொண்டு வந்து, நெறிப்பதுபோல் காட்டினாள்.

மெய்யப்பன் கீழே குதித்தான். ஓடிப்போய், அவள் இருகரங்களையும் எடுத்து, கண்களில் ஒற்றிக் கொண்டான்.