பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136 வெளிச்சத்தை நோக்கி...

என்பதுபோல், சத்யாவைப் பார்த்தான். அவள் "காலுல விழுந்து வாங்குங்க.." என்றபோது, மெய்யப்பன் கட்டில் சட்டத்தில் கையூன்றி எழப்போனான். பெரியவர் மீண்டும் கையமர்த்தினார். "கவலப்படாதப்பா... ஒனக்கு சீக்கிரம் குணமாயிடும். நிச்சயமாய் குணமாயிடும்..."

இதுவரை யாரும் குணமாயிடும் என்று அழுத்தந் திருத்தமாகச் சொல்வதைக் கேட்டறியாத மெய்யப்பன், அப்போதே குணமானதுபோல் எழுந்தான். பெரியவரின் காலைப் பிடித்துக் கொண்டு விம்மினான். கண்ணுக்குப் புலப்படாமல், கருத்துள் ஒளிந்திருந்த ஒருவரை, கண்ணெதிரே கண்டவன்போல் விம்மினான். "எனக்குக் கூட குணமாயிடுமா.. எனக்குக் கூடவா..." என்றான். அவரது கண்களைப் பார்க்கப் பார்க்க, அவனுக்கு உள்ளத்தில் ஒளி ஏற்பட்டது போலிருந்தது. அந்த ஒளியே தீயாகிப் பிரமைகளைச் சுடுசாம்பலாய் எரிப்பது போலிருந்தது.

பெரியவரும் இப்போது உணர்ச்சி வசப்பட்டவர்போல் பேசினார்.

"இளமையில், என் வாழ்க்கையும் ஒன் வாழ்க்கையும் ஒரு மாதிரியான வாழ்க்கையாய் ஆனதால சொல்றேன்... பர்மாவுல பிறந்து, சின்ன வயசிலேயே பெத்தவங்களை இழந்தவன் நான்... இதனால, சமூகத்தையே பெற்றவர்களாய் நினைக்கப் பழகுனவன்... பர்மாவுலயும்... நேபாளத்துலயும் புத்த பிட்சுக்களோடயும் சித்த புருஷர்களோடயும் பழகிய கட்டை இது இரண்டாவது உலகப்போர்ல.... பர்மாவுல இருந்து, கால்நடையா புறப்பட்டு ஆயிரக்கணக்கான இறப்பையும் பிறப்பையும் பார்த்துப் பார்த்து... எல்லாவற்றையும் ஒரே மாதிரி பார்க்கப் பழகுன கட்டை ஒன் முகக் குறிப்பை வச்சே தெரிஞ்சிக்கிட்டேன். ஒனக்கு சீக்கிரம் குணமாயிடும். இதுல தம்பட்டம் அடிக்க எனக்குத் தகுதி இல்ல. என் மகள் ஒனக்கு சுகமாகணுமுன்னு நினைக்கிறாள்.... அவள் நினைத்தது நடப்பதற்கு நான் வெறும் கருவி. அவ்வளவுதான்.."

மெய்யப்பன், குழந்தைபோல் முகம் ஏங்கக் கேட்டான்: