பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 137

"சாமி... நிச்சயமாய் குணமாயிடுமா... ஒங்களை குணமான நிலையில பார்ப்பேனா.."

"கவலப்படாதப்பா.... என் குருநாதன் ராமையா அம்பலத்தை நினைத்து... இந்த ரங்கசாமி கொடுக்கிற விபூதி வீணாகாது... அதை வீணாக்காமல் பார்த்துக்கிற வல்லமை என் மகள்கிட்ட இருக்கு... ஒரு முருகன் படத்தை வாங்கி வை... பழனியாண்டி காலை கெட்டியாப் பிடிச்சுக்கோ... ஏண்டா கவலைப்படுற... அப்பனையே துச்சமாக நினைத்து தனியாய் போன முருகன்... ஒன்னை தனியா விடமாட்டான்... இன்னையோடு ஒன் கஷ்டகாலம் நீங்கிட்டுன்னு நினைச்சுக்கோ...”

பெரியவர் எழுந்தார். அவனிடம், மேற்கொண்டு எதுவும் பேசாமலே வெளியே வந்தார். ஆகாயத்தைத் துருவிப் பார்த்துக் கொண்டார். சத்யா தயக்கத்தோடு கேட்டாள், "நீங்க இந்த அளவுக்கு யார்கிட்டயும்... இப்டி மனம் விட்டுப் பேசினதை நான் கேட்கல..."

பெரியவர் அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார். மெய்யப்பனை உற்று நோக்கியபடியே உபதேசித்தார். "கவலப்படாதே மகனே... உன் கோளாறுகளுக்கு தீர்வே இல்லை என்று நினைக்காமல், ஒன் கோளாறுகளுக்கு மட்டுமில்லை - உலகத்தின் கோளாறுகளுக்கே தீர்வு உண்டு என்று நினைத்துப் பழகு... பிரசவ வாதை இல்லாமல், பிள்ளைப்பேறு இல்லை... மனவாதை இல்லாமல், ஞானப் பேறும் இல்லை... இந்த உலகமும் சரி...உலகின் தாவர சங்கமும் சரி... பிரபஞ்சத்துடன் சம்பந்தப்பட்டவை... இதனால்தான் இங்கே இருக்கிற ஒரு சின்னப் பூவைப் பறித்தாலும்... அது எங்கேயோ இருக்கிற நட்சத்திரங்களில் எதிரொலிக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இப்படி பெளதீக விதிகளால் வெளிமுகமாகப் பார்த்ததை, இந்த பெளதீக விதிகளுக்கு உட்பட்ட உடம்பை, நம் ஞானிகள் உள்முகமாய்ப் பார்த்தார்கள். பனித்துளி, பனையையே பிரதிபலித்துக் காட்டுவதுபோல் நெத்திப் பொட்டின் உள் பகுதியும்

10