பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 139

செயற்கை வைரம் மாதிரி கொண்டு வரலாம். அதுக்கு இதோ ஒரு வழி..."

"மல்லாந்து படுத்துக் கொள். உடம்பை லகுவாக்கு. இந்த உடம்பில் இருபத்தேழு மையங்கள் உள்ளன. இரண்டு கணுக்கால்கள், முட்டிக்கால் குமிழ்கள், பிறப்புறுப்பு, தொடை முனைகள், உந்தி, இருதயம், துரையீரல்கள், தோள் குவிப்புகள், முட்டிக்கை குவிப்புகள், கணுக்கை முனைகள், தொண்டையின் மையம், காதுகள், கண்கள், வாய், மூக்குத் துவாரங்கள், நெற்றிப் பொட்டு, உச்சந்தலை ஆகிய இந்த மையங்கள் ஒவ்வொன்றையும், இரண்டு கண்களால் 'ஓம்' என உச்சரித்தபடியே ஆறு ஆறு தடவை மானசீகமாக மனதைச் சுற்றவிடு. ஒரு மாதத்திற்குப் பிறகு.... என்னிடம் சொல்லு... ஏன் யோசிக்கிறே... சொன்னபடி செய்வியா..?”

சத்யா, அந்தப் பெரியவருக்கே உபதேசியானாள்.

"எல்லாவற்றையும், மொத்தமாய். அவசர அவசரமாய் சொன்னால் அவருக்கு ஒன்றுகூட வராது..."

பெரியவர் அவளைக் குருவைப் பார்ப்பதுபோல் பார்த்தார். பிறகு, பத்மாசனம் போட்டு உட்கார்ந்தபடியே, சாவகாசமாகப் பேசினார்.

“நல்ல வேளையாய் ஞாபகப்படுத்துனே... டாக்டர் நித்தியானந்தம் என்ற யோகி சொல்லிக் கொடுத்த இதை - ஞானப் பயிற்சியை செயல்முறையில் விளக்குகிறேன்... மெய்யப்பா... இப்படி வந்து உட்கார்... நீயும் உட்காரும்மா..."

சத்யாவும், மெய்யப்பனும், அவர் முன்னால் ஜோடியாக உட்கார்ந்தார்கள்.