பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம்

141

மெய்யப்பன் மெய்மறந்து கும்பிட்டான். 'பொய்மை உணர்வுகள் போயின போயின' என்று சொல்லிக் கொண்டே, கண்மூடி, கரங்கூப்பி, கும்பிடக் கும்பிட, அவன் உடலெல்லாம் புல்லரித்தது. முருகன் அவன் தோளை நிமிர்த்துவது போலிருந்தது. அவன் நெஞ்சுள் பூப்போல் புகுந்து, நெருப்பாய் மலர்ந்து பொய்மைகளை எரித்து, சரவணப் பொய்கையாய் மலர்வது போலிருந்தது. இதயப் பொய்கையில், எண்ணக் குமிழிகள் இல்லாதது போலிருந்து, குன்றுதோறும் குடியமர்ந்த ஞான பண்டிதனை, கண்மூடி உள்வைத்து, 'சண்முகக் கடவுளே... என் சிந்தையில் வந்து உட்காரப்பா...' என்று பலதடவை சொல்லியபடியே, அப்படியே உட்கார்ந்தான்.

திடீரென்று, 'குமார் வந்துட்டார்' என்று குரல்கேட்டுக் கண்விழித்தான். பியூன் முனுசாமி, வழக்கமாய் அட்டகாசமாய் நுழைபவன், பதுங்கி வந்தவன்போல் நின்றான். முருகப் படங்களைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுவிட்டு, கட்டிலில் உட்கார்ந்தான். மெய்யப்பனிடம் பேசினாலும், அவனிடம் பேசாதது போலவே பேசினான்.

"இன்றைக்கு மத்தியானம்... குமார் ஸார் வந்து டூட்டில சேர்ந்துட்டார்.... ஒங்க நிலைமையை வாணியம்மா விளக்கிச் சொன்னாங்க... அவர் அசந்து போயிட்டார். நிலைமை சீரியஸாப் போகுது. இப்போ... மானேஜர்... எதுக்கு கெடுத்தாலும் விமலாவைத்தான் கூப்புடுறார். அவளும் கொண்டையை ஆட்டிக்கிட்டே போறாள்... வாணிக்கும், மானேஜருக்கும் பயங்கரமான யுத்தம். விவகாரம் மானேஜிங் டைரக்டர் வரைக்கும் போயிட்டு... விமலா, சிரிக்கச் சிரிக்க... வாணி அழுகுறாங்க... வாணி, அழ அழ, விமலா, சிரிக்கிறாள். வாணிக்குக்கூட, இங்க வந்து, ஒன்னைப் பார்க்கதுக்கு ஆசை... நீ என்ன சொல்லு வியோன்னு பயம். சரி... அது போவட்டும். நான் வந்தது வேறு விவரத்தைச் சொல்லுறதுக்கு... அந்த மானேஜர், ஒன்னை கம்பெல்ஸரி லீவ்ல போகச் சொன்னால் போதுமுன்னு பாஷ்யம் சொன்னதை ஒத்துக்கிட்டது மாதிரிப் போனருல்லா? இப்போ நீ, ஸ்டேட்மெண்ட்டை கிழிச்சதாயும், ஒன்னை ஆபீஸ்ல வச்சுருக்க முடியாதுன்னும்,