பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

வெளிச்சத்தை நோக்கி...


"அது அவுட் ஆப் டேட்டுன்னு தெரிந்து..."

"மெய்யப்பன்... கோப்பரேட்டிவ் பேஷண்ட் மாதிரி தோணுது... அவரோட உணர்வுகளுக்கு வெளிப்பாடு கிடைத்தால்... சரியாயிடுவார்னு நினைக்கேன். ஏன்னா... இயல்பிலேயே எதையும் நம்புறவர்... நம்பிக் கெட்டவர்... நாம் சொல்றதை நம்பியாவது குணமாகட்டும்..."

ரகுராமன், மெய்யப்பனைக் கூப்பிடுவதற்காக எழுந்த போது, அவனும், குமாரும் ஜன்னல் பக்கத்தில் இருந்து திருட்டுத்தனமாக நழுவப் பார்த்தார்கள். ரகுராமன், குரல் கொடுத்தார். ரமாவும், எழுந்து பார்த்தாள்.

"பார்த்ததினால தோசமில்ல... வாங்கோ..."

வந்தார்கள். வந்து நாற்காலியில் உட்கார்ந்தார்கள். ரகுராமன், மெய்யப்பன் எழுதிய காகிதங்களைப் புரட்டிக் கொண்டே, "மிஸ்டர் மெய்யப்பன், தண்ணீரைக் குடிக்கும் போது, ஒங்களுக்கு அதுவே, அக்கினித் திராவகமாய் மாறிடுறது மாதிரி தோணுதா, இல்ல... அக்கினித் திராவகத்தோட நெனப்பு வருதா...?”

மெய்யப்பன், நாற்காலி முனைவரைக்கும் நகர்ந்து உட்கார்ந்து கொண்டே, தட்டுத் தடுமாறிப் பேசினான்.

"என்னோட நிலைமை... என் எதிரிக்குக்கூட வரப்படாது ஸார்..... முழுப் பைத்தியமுன்னால், பரவாயில்லை... பைத்தியமாகாமலே, பைத்தியக்கார உணர்வுகளை அனுபவிக்கிறேன்... அதாவது, ஒரு பைத்தியத்தை, ஒரு சராசரி மனிதன் பார்க்கிறது மாதிரியான இரண்டு வித உணர்வுகள். பாம்பு, தவளையின் உயிரைக் கொல்லாமல், உடம்பைச் சிறுகச் சிறுகத் தின்கிறது மாதிரியான நிலைமை. பாம்பாயும் இருக்கேன்... தவளையாயும் இருக்கேன்... பல்லியாயும் கொதிக்கேன்... பூச்சியாயும் தவிக்கேன்... உங்களாலயும் என்னைக் குணமாக்க முடியாட்டால், நான் உயிரோடு இருக்கதுல அர்த்தமில்ல..."