பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156 வெளிச்சத்தை நோக்கி...

மெய்யப்பன், உடலும் விலகி, உள்ளமும் விலகி, தனித் தனியாய் ஆனதுபோல் படுக்கையில் மிதந்தான். அவன் கண்கள் மூடின. உடம்பு அசைவற்றுக் கிடந்தது. ஞானிகள் தேடிய மெய்ஞ்ஞான தூக்கம் போன்ற பெருநிலை. மனம் மரித்துப் போனது போன்ற மரணநிலை. சாந்தியின் சந்திப்பு போன்ற தவநிலை.

ரகுராமன், நிதானமான குரலில், ஆணையில்லாத, அன்புக் கட்டளையோடு பேசினார்: "மெய்யப்பன், உங்க வீட்டுக்கு வெளியே, அந்த சொறி நாயை இப்போது பார்க்கிறிங்க... அது என்ன பண்ணுது..?"

திடீரென்று மெய்யப்பனின் கால் கைகள் ஆடின. உதடு துடிக்கக் கத்தினான். வயிறு குலுங்க அழுதான். பயம் ஒலிக்க அரற்றினான். "அந்த நாய்... என் வயிற்றைக் கீறுது... என் குடல் சரியுது.... சரிந்த குடலை கெளவிக்கிட்டு நடக்குது. நான் வயிற்றைப் பிடிச்சுக்கிட்டே நாய் பின்னால போறேன். நாய், என்னை இழுத்துக்கிட்டே போகுது. அய்யோ என்னை காப்பாற்ற ஆளில்லையா.... அய்யோ.... குடலை இழுக்குதே... யாருமே இல்லையா... என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையா... அய்யோ... நாய் குடலு... நாய்... நாய்... யாருமே இல்லியா..."

"ஏன் இல்லாமல்... நான் இருக்கேன், மெய்யப்பன்.... கத்துனதுபோதும், இப்போ ஆபீஸ்ல வேலை பார்க்கிங்க... அங்கே ஏதாவது ஏமாற்றம் ஏற்பட்டிருக்கலாம். டக்குன்னு உங்க ஏமாற்றத்துக்குக் காரணமான ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுங்க.."

மெய்யப்பன், நெளிந்தான்.

"உம்... சொல்லுங்க..."

"சொல்றேன். டீக்கடை பக்கம் நிற்கிறேன். வாணியோட தோளுல.‌‌.. கைபோட்டபடி, மானேஜர், கார்ல போறார்..."

"அப்போ... நீங்க எப்படி துடிச்சிங்க...? உங்க மனம் எப்படிக் கூப்பாடு போட்டது.... அதை இப்போது வார்த்தைகளாய் வெளிப்படுத்துங்கள்..."