பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 வெளிச்சத்தை நோக்கி...

"எவ்வளவு பணம் தரணும்" என்றாள் கனகம்.

"அதை அப்புறம் பார்த்துக்கலாம்" என்றான் மெய்யப்பன்.

குமார் மட்டும், "பய... நீட்டுற வேகத்தைப் பார்த்தால்... பித்தளை மோதிரம் மாதிரி தெரியுது... ஏமாந்துடாதீங்க..." என்றான்.

எல்லோரும் போய் விட்டார்கள். குமாரும் மெய்யப்பனும், இப்போது சீரியஸாகப் பேசிக்கொண்டு எழுந்தார்கள். மானேஜர் அறைக்குள் போகப் போனவனை, குமார் கழுத்தைப் பிடித்துத் திருப்பி, அலுவலகத்திற்கு வெளியே கொண்டு வந்தான். செல்லக் கண்டிப்போடு அதட்டினான்.

“ஏண்டா... ஒனக்கு அறிவிருக்காடா... ரெண்டு மோதிரமும், ஒரு பவுனுக்கு மேல போகும். இப்டியாடா வீசுறது."

"விட்டுத்தள்ளுடா... கனகம் ஒரு தடவை கேட்டாள்... நான் சரின்னு எப்டியோ சொல்லிட்டேன். நல்ல பொண்ணு... போட்டுட்டுப் போறாள்..."

"போடா மடையா... வாணியாவது ஒன்னை தம்பி மாதிரி நினைக்கிறவள். கொடுத்தால் பரவாயில்லை... இந்த கனகம் யாருடா... இதையே நாளைக்கு ஒன் மனைவிக்காக வச்சிருக்கலாம் இல்லையா..."

"எங்க பாட்டி விவகாரம் ஒனக்குத் தெரியாதுடா... இப்போகூட அவள் இறந்தது... எனக்குப் பெரிசாத் தெரியல... அந்த அளவுக்கு அவள் கிட்ட... சரி... விட்டுத்தள்ளு... அவளோட பொருள் எதையும் என்கிட்ட வச்சுக்க நான் தயாராய் இல்லை. அதை விற்றுப் பயன்படுத்தவும் தயாராய் இல்ல... தூர வீசியெறிய வேண்டியதை... அவங்ககிட்ட கொடுத்தேன்."