பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158 வெளிச்சத்தை நோக்கி...

இவ்வளவு நாளும் என்கிட்ட நடிச்சிருக்காள். என் நல்ல குணத்தை அவள் நடிப்புக்கு மேடையா போட்டிருக்காள். விமலா, உதவி செய்த என்னையா உதறுறே... ஏறிய ஏணியையா உதைக்கிறே... உதைத்தால்கூட பரவாயில்லை. அதை விறகாய் எரிச்சுட்டியே.... ஒன்னை உயிரோட எரிக்கணும்.... எரிக்கணும்... ஒன் உடம்பு அணு அணுவாய் நெருப்புல கருகணும்... நானா பித்துக்குளி? உன் உடம்பையே உயிராய் நினைத்து... அதைத் தொடாமல் புனிதமாய் இருந்த நானா பித்துக்குளி? உதவியவன் பித்துக் குளின்னால்... உதவி பெற்றவளுக்கு என்ன பேருடி? விவஸ்தை கெட்டவளே... ஒன்னை அணுஅணுவாய் வெட்டணும்... கணுக்கணுவாய் துண்டிக்கனும்."

"போதும் மெய்யப்பன்... இப்போது ஒங்களுக்கு பதினாறு வயது. எஸ்.எஸ்.எல்.சி. படிக்கிறிங்க... ஏதாவது ஏமாற்றமான நிகழ்ச்சி ஏற்பட்டிருக்கா..."

"ஒண்ணா... ரெண்டா..."

"மொதல்ல. முக்கியமானதைச் சொல்லுங்க."

'பத்தாவது படிக்கேன்.... எல்லாப் பையன்களும், மத்தியானச் சாப்பாடு கொண்டு வாராங்க... என்னால கொண்டு வர முடியல... என்னோடு காமாட்சின்னு ஒரு பெண் படிக்கிறாள். எனக்காகப் பரிதாபப்படுகிறது மாதிரி பார்க்கிறாள். காதலித்தாலும் காதலிப்பான்னு நினைக்கேன். என் காலுல செருப்பு கிடையாது. கிழிந்தவேட்டி, பேண்ட் போட்ட பசங்க என்னைப் பார்த்து சிரிக்காங்க... ஒருநாள், என் வேட்டில, பின்பக்கம் கிழிஞ்சு சதை தெரியுது. ஒருவன், அதை இன்னும் கொஞ்சம் கிழிக்கிறான்... இப்போ வேட்டியால் பின்பக்கத்தை மறைக்க முடியல... நான் டெஸ்குக்குக் கீழே... பாதி உடம்பை மறைக்கிறேன். எல்லாப் பையன்களும் சிரிக்காங்க வாத்தியார், நீயில்லாம், ஏண்டா ஸ்கூலுக்கு வாரேன்னு கோபமாய் சொல்லிவிட்டு, பலமாய் சிரிக்கிறார். நான், காமாட்சியைப் பரிதாபமாய் பார்க்கேன். அவள், துடுக்கான பொண்ணு... அவங்களை திட்டப் போறாள்னு நினைக்கேன். ஆனால், அவள்... அவள்...."