பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23



பயங்கரமான சண்டைக் காட்சிகள் நிறைந்த திரைப்படத்தைப் பார்த்து முடித்த அனுபவம். போரில் பேரழிவுகளை நேரிடையாகப் பார்த்தும், அவற்றில் பங்கு பெற்றும், பின்னர் அமைதியான சொந்தக் கிராமத்திற்கு, நிரந்தரமாகத் தங்க வந்திருக்கும் போர் வீரனைப்போன்ற மனப்போக்கு. கெட்டதை அமுக்கி, நல்லது மேலோங்கியிருப்பது போன்ற உணர்வு நிலை.

மெய்யப்பனுக்கு, பழைய நினைப்புக்களும், நிகழ்ச்சிகளும் கடந்தகால அனுபவமாகி விட்டன. அனுபவம் முக்கியமல்ல. அந்த அனுபவத்தில் இருந்து எப்படிப் பாடம் கற்றுக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். பழைய அனுபவங்கள், அரக்கத்தனமான பிரமைகளைக் கொடுத்த புதிய அனுபவமாகி, அந்தப் புதிய அனுபவம், அவனுக்குப் புதுமையான-பொதுமையான பாடத்தைப் போதித்தது. 'பழைய காலத்தில் திரும்பி நடக்க வேண்டாம்... பழைய காலத்தை திரும்பிப் பார்க்காமலும் இருக்க வேண்டாம்' என்று ரகுராமன் ஒரு சமயத்தில் சொன்னது, இன்னும் அவன் காதுகளில் ஒலிக்கிறது. 'எதற்குப் பயப்பட்டாலும், இந்தப் பயத்திற்கு மட்டும் பயப்படக்கூடாது...' என்று அவர் உபதேசித்தது எப்போதும் இதயத்தில் ஒலிக்கிறது.

எல்லாவற்றையும் புதிய கோணத்தில் பார்த்தான். சுற்றுப்புறச் சூழலில் தோன்றும் மண்ணும், செடியும், ம ர ங் களு ம் , தாவர சங் க ம த் தி ன் அ ர் த் த மி க் க உயிர்ப்புக்களாகத் தெரிந்தன. இப்போதுதான் விதவிதமான மரங்கள், பறவைகள், அவை சொல்லாமல் சொல்லும் வனப்பின் நேர்த்திகள், அவன் பார்வைக்கு வந்தன. ஒவ்வொரு பறவையும் ஒரு அழகு. ஒவ்வொரு மரமும் ஒரு நேர்த்தி. ஒவ்வொரு பூவும் ஒரு பூப்பு. ஆசனப் பயிற்சியால் உடலுக்குள்ளேயும், உள்ளத்திற்கு உள்ளேயும் ஒரு அமைதி. பலப்பல புத்தகங்களைப் படிப்பதால், 'இவ்வளவு நாளும் இந்த இன்பம் தெரியாமல் போனதே' என்ற விசன ஆனந்தம்.