பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 வெளிச்சத்தை நோக்கி...


முடியவில்லை அந்த அலுவலகமே அவனுக்கு வேறுவிதமாகத் தெரிந்தது. வேலை ஓடவில்லை. அரைநாள் லீவு போட்டுவிட்டு, குமாரிடம் கூடச் சொல்லாமல் போய்விட்டான்.

(3)

ஒரு வாரம் வரை வினாடிகள் கூட அவனுக்கு யுகங்களாகத் தெரிந்தன. என்னதான் மறக்க முயன்றாலும் விமலாவை அவனால் மறக்க முடியவில்லை. அதே சமயம் அவளாகப் பேசாமல், தான் பேசப் போவதில்லை என்றும் தீர்மானித்துக் கொண்டான். அந்தத் தீர்மான வேகத்தில் இன்னொரு வாரம் ஓடியது. குமாரிடம் யந்திர கதியில் பேசினான். அவனும் இவன் அதிர்ச்சியைப் புரிந்து கொண்டவன்போல், விட்டுப் பிடிக்க நினைத்தவனாய், நண்பனிடம் இருந்து விடுபடாமலே இருந்தான்.

துள்ளிப் பாயும் ஆறு அணைக்கட்டில் சிறைப்பட்டு அசையாமல் தேங்கியதுபோல், எட்டிப் பாய்ந்த வெட்டுக் கிளி எதனிடமோ சிக்கிக் கொண்டதுபோல், மெய்யப்பன் உணர்வுகளில் சிக்கி, சீரழிந்து, இறுதியில் யாரிடமும் பேசாத மெளன நிலைக்கு வந்தான். அலுவலக ஊழியர்கள் அவனிடம் பேசிப் பார்த்தார்கள். அவன் ஒரே வார்த்தையில் பேச்சை முடித்தான். விமலாவின் 'புதுமைப்' போக்குதான், அவனை அடிசாய்ந்த மரமாக்கிவிட்டது என்பது அவர்களுக்குத் தெரியும். ஆக, அவர்களும் அவனை விட்டுப்பிடிக்க நினைத்தார்கள்.

விமலாவை விட்டுவிட வேண்டும் என்று முதல் வாரம் நினைத்து, விட்டுப் பிடிக்க வேண்டும் என்று இரண்டாவது