பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 25

"பிறகு... எதுக்குடா... டிக்கெட் ரிசர்வ் பண்ணச் சொன்னே?"

"நாம்... ரிசர்வ் பண்ணுன எல்லாமே நமக்குக் கிடைக்குதா? நீ பாட்டுக்குப் போடா..."

குமாருக்கு, இப்போதுதான் உறைத்தது. விமலாவை அடிக்கப்போகிறவன்போல், கைகளை ஆட்டிக் கொண்டே பார்த்தான். அழகான ஒரு பெண், அசிங்கமான குணங்களைக் கொண்டிருந்தால், அந்த அழகே கோரமாகி விடும் என்பதைக் கண் முன்னால் கண்டவன்போல், அவளைப் பார்த்தான். பிறகு, மெய்யப்பனைப் பார்த்தான். அவனோ, 'ஒருதலை ராகத்து' கதாநாயகன் மாதிரி, ஒரு வேளை அந்த கதாநாயகனைப் பார்த்த பாதிப்பாலோ என்னவோ தலைகுனிந்து, பைத்தியம் போல் சிரித்தான். குமாரால் பொறுக்க முடியவில்லை. கத்தினான்.

"நீ எதுக்கு உட்கார்ந்திருக்கேன்னு எனக்குத் தெரியுண்டா... இப்படி உட்கார உட்கார, ஒரு நாள் ஒரேயடியாய் எழுந்திருக்க முடியாமல் போகப்போற... 'கிட்டாதாயின் வெட்டென மற'ன்னு சொன்னாங்க... இது கிட்டி வந்தாலும், தட்டிவிட்டு மறக்க வேண்டிய விவகாரம்."

மெய்யப்பன் மேஜைமீது நிலைநாட்டிய கண்களை சிறிது உயர்த்தி, குமாரைப் பார்த்துக் கொண்டே பேசினான். "ஒரு விஷயத்தை மறக்கறதுக்கும்... அதை பல தடவை பல கோணத்துல நினைத்துப் பார்க்கணும்..."

"ஒன் கூட மனுஷன் பேசுவானா...?பேசுறவன் மனுஷனாத்தான் இருப்பானா..."

மெய்யப்பன், விமலாவைப் பார்த்தான். அவள் சர்வ அலட்சியத்தோடு புறப்பட்டுப் போனாள். அவனுக்கு, குமார் மீது என்றுமில்லாத அளவு எரிச்சல் வந்தது. "டேய்! நீ மனுஷன்தானே... பின்ன ஏண்டா என்கிட்டே பேசுறதுக்காக நிக்கிறே? நீ எனக்கு நல்லது செய்யுறதாய் இருந்தால், அது, நீ இப்போ போகிறதுதான்."