பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 வெளிச்சத்தை நோக்கி...

குமாருக்கும் இப்போது ரோஷம் சீண்டியது. மெய்யப்பனையும் விமலாவையும் மாறிமாறிப் பார்த்தான். "கெட்டுப்போறேன்... பந்தயத்துக்கு வாறியாடான்னு கேட்கிற ஒன்கிட்ட என்ன பேசமுடியும்..." என்று தன்பாட்டுக்குச் சொல்லிக் கொண்டான். பிறகு ரிசர்வ் செய்த சினிமா டிக்கெட்டுக்களை மெய்யப்பன் எதிரிலேயே கிழித்துப் போட்டுவிட்டு வேகமாக வெளியேறினான்.

விமலா, இதனால் பாதிக்கப்பட்டதுபோல் தெரிய வில்லை. டம்பப் பையை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு, நாற்காலியை சத்தம் ஏற்படும் வகையில் இழுத்து ஒதுக்கிவிட்டு, கை நகங்களைப் பார்த்தபடியே நடந்து கொண்டிருந்தபோது, மெய்யப்பன் அவளுக்குக் குறுக்காகப் போய் நின்றான். விமலாவுக்கு சிறிது பயம். அதேசமயம், உள்ளே மானேஜரும் வாணியும் இருக்கிற தைரியம். அவனைக் கூராகப் பார்த்தாள். பிறகு “வழி விடுங்க..." என்றாள்.

மெய்யப்பனும் ரோஷத்தோடு பதிலளித்தான். "ஒனக்கு ஒரேயடியாய் வழிவிடத்தான் இப்போ வழி மறிச்சு நிக்கேன் விமலா... நாம ரெண்டு பேரும் எவ்வளவோ காலமாய் மனம்விட்டுப் பழகுன உரிமையில கேட்கிறேன். உரிமைன்னு சொல்றது கூட தப்பு... ஒருவித கடமையில் கேட்கிறேன்... ஏன் இப்போல்லாம் பட்டும் படாமலும் நடந்துக்கிறே? நாம ஆபீஸுக்கு வரும்போதும் போகும்போதும் சேர்ந்தே வருவோம்... சேர்ந்தே போவோம்... இதை மறந்துட்டியா? விமலா... நீ இப்டி... மாறுறதுக்கு நான் என்ன தப்பு செய்தேன்? அதை மட்டும் சொன்னால் போதும்..."

விமலா சிறிது நேரம் நகத்தைக் கடித்தாள். பெருவிரலால் தரையில் வட்டம் போட்டாள். பிறகு, "எனக்கு நேரமாகுது..." என்றாள்.

மெய்யப்பனால் தாள முடியவில்லை. அடம் பிடித்து விட்டு, பிறகு அடிபட்டதும் அம்மாவிடமே அடைக்கலம் தேடும் குழந்தைபோல் மன்றாடினான். "ஒனக்கு என்கிட்ட