பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27 வெளிச்சத்தை நோக்கி...

விட்டுப் பழகிய ஒருத்தியின் மனதில், ஒரு நடுத்தர வயது மனிதன் கூட ஏற்படுத்தக்கூடிய சலனத்தை, தன்னால் ஏற்படுத்த முடியவில்லையோ என்று தன்மீதே சந்தேகப் பட்டவன்போல், தன்னையே பார்ப்பவன்போல், நெஞ்சை நோக்கிக் கண்களை நிலை நாட்டினான். பிறகு கடந்த கால நிகழ்ச்சிகள் மின்வெட்டுபோல் ஒரு கணத்தில் தோன்றி மறைய, அவளின் உடம்பைப் போல், உள்ளத்திற்கும் போட்டிருக்கும் மேக்கப்பைக் கலைக்க விரும்பியவன்போல், நிதானமாக, ஆணித்தரமாகப் பேசினான். அவனைக் கடக்கப்போன விமலா, அவன் குரலுக்கு ஒடுங்கியவள்போல் காது கொடுத்தாள்.

"குட் வெரி குட்..‌. நீ புத்திசாலிப் பொண்ணு... ஒரு தடவை கடற்கரையில் உன் கையை அழுத்தியதைக்கூட, 'சகோதரன் சகோதரி கையை பிடிக்கக் கூடாதான்னு கேட்பே... அந்தச் சமயத்தில்,'இப்பவே இப்படின்னா... அப்புறம் எப்படியோன்னு' கேட்டதைக்கூட, 'இப்போ இப்டி இருக்கும் நான், அப்புறம் மாறிடுவேன்’னு மனசுல வச்சுத்தான் சொன்னேன்னு சொன்னாலும் சொல்லுவே... ஒரு தடவை மோகனோட கல்யாணத்துக்கு நாம் ஜோடியாய் போனபோது, இந்த சந்தானம் 'ஒங்களுக்கு எப்போடா' என்று கேட்டதுக்கு, நான் மழுப்பலாய் சிரிக்க, நீயோ, 'நான்தான் பெண்... பேச முடியல... நீங்களாவது நமக்கு அடுத்த வருஷண்டானுன்னு' சொல்லப்படாதான்னு கேட்டே... இப்போ நமக்கு முன்னால் 'ஒங்களுக்கு இன்னொருத்தி... எனக்கு இன்னொருத்தன்...' என்கிற அர்த்தத்துல சொன்னேன்னு சாதிப்பே... ஒரு பெண் காதலியாய் இருந்தாலும், அவள் கழுத்தில் தாலி ஏறும்வரை, ஒருவன், அவளிடம் சகோதரியிடம் பழுகுவதுபோல் பழகனும் என்று நான் கடைப்பிடித்த பண்பையே, இப்போ எனக்கு எதிராய் திருப்பிடுவே... பரவாயில்ல... நம் பழக்கம் போனாலும்... எனக்கு அந்தப் பண்பு போகாது... நான் பண்புள்ளவன். வேஷம் போடத் தெரியாதவன்... சமயத்துக்கு ஏற்றபடி பழக்கத்துக்கு புதுப்புது அர்த்தம் கொடுக்கிறவன் இல்ல..."