பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 29

விமலாவுக்கு , அவன் தன்னைத் தான் குத்திக் காட்டுகிறான் என்பது புரிந்ததில் குழப்பம், கோபமாகியது... வார்த்தைகளால் குத்தினாள்.

"நான் எப்பவும் சலனப்பட்டதில்லை. அப்படியே வாதத்துக்காக சலனப்பட்டதாய் வைத்தாலும்... அந்த சலனத்தில் இருந்து மீள எந்தப் பெண்ணுக்கும் உரிமையுண்டு..."

"நிச்சயமாய்... ஒன் வழியை மாற்றிக் கொள்ள ஒனக்குப் பூரண உரிமையுண்டு... அதை... நான்... தடுக்கப் போறதில்ல..."

"நீங்க தடுக்க நினைத்தாலும் முடியாது... உங்களைக் கல்யாணம் செய்துக்கப் போறதாய், நான் சொன்னது கிடையாது."

மெய்யப்பன் யோசித்தான். அவள் சொன்னது 'டெக்னிக்கலாக' சரிதான். அம்மாவிடம், பையன், நான் ஒன் மகன் என்று சொல்ல வேண்டியதில்லை. அப்பாவிடம், 'நீதானே என்னை பெத்தேன்'னு கேட்க வேண்டியதில்லை. அதுமாதிரிதான், மனமொத்து, கைகோர்த்துப் பழகும் சமவயது ஆண், பெண், காலம் கனியும்வரை கல்யாணத்தைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. அதுவும், ஆபீஸ் பிரச்சினை களைப் பற்றி பேசவே நேரம் போதாத போது... மானேஜரிடம் இருந்து, அவள் எப்படி எப்படி தப்பிக்க வேண்டும் என்பதற்குத் திட்டம்போடவே நேரம் இல்லாத சமயத்தில், கல்யாணப் பேச்சு வரவில்லைதான். 'இப்போ, அதையே ஆதாரமாகக் காட்டி, அவள் காதல் இல்லை' என்கிறாள். 'டெக்னிக்கலாக' சரிதான்.

விமலா, அவனை மோதிக் கொண்டும் போகத் தயார் ஆனவள்போல், கைகடிகாரத்தைப் பார்த்துவிட்டு, முண்டியடித்தாள். சிறிது வழிவிட்ட மெய்யப்பன், அவளைப் பார்க்காமலே அரற்றினான். "இன்னும் ஒரே ஒரு வார்த்தை மேடம்... என்னை மாதிரி பல வெகுளிங்க இருக்காங்க... வள்ளுவர் சொன்னது மாதிரி, 'கண்ணோடு