பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 வெளிச்சத்தை நோக்கி...

காலத்தில், ஒருவர் பிரச்சினைக்குரியவராக இருந்தாலும், அவரை விட்டுவிட்டு, அவர் எழுப்பும் பிரச்சினையை மட்டும் விவாதித்த மேலாளர். யாராவது, எவரைப் பற்றியாவது, எதையாவது சொல்லத் துவங்கும்போது, "நேற்று குழந்தைக்கு உடம்புக்கு சுகமில்லன்னீங்களே... எப்படி இருக்கு?" என்று பதிலளிக்கும் பக்குவவாதி.... சந்தர்ப்பவாதியல்ல... அவரும் இந்த அக்காளும் தங்கள் வீட்டில் நண்பர்களுக்கு 'பார்ட்டி’ கொடுத்திருக்கிறார்கள். அப்போது இந்த அக்காவின் கருணைக் கண்கள் நிலவின் குளுமை கலந்த சூரியப் பிரகாசமாக மின்னும். இருவரும் ஒருவருக்கொருவர் படைக்கப் பட்டவர்கள்போல் தோன்றுவார்கள். பார்ட்டிக்கு வந்திருக்கும் யாராவது மனைவியிடம் தனியாகச் சிரித்துப் பேசினாலும், அதைத் தப்பாக எடுக்காத மனிதர். இயல்பிலேயே நல்லதையே நினைத்து, நல்லதாக வாழ்ந்த மனிதர். அப்படிப்பட்டவருக்கு பிளட்பிரஷ்ஷர் கிடையாது. நீரிழிவு நோய் கிடையாது. ஆனால், ஹார்ட் அட்டாக் வந்து நாற்பதாண்டு வாழ்வை நான்கு நிமிடத்தில் பறித்துவிட்டது. 'மாஸிவ்' ஹார்ட் அட்டாக் என்கிறார்கள் டாக்டர்கள். அதற்கு எந்த நோயும் முன்கூட்டியே வர வேண்டிய தில்லையாம்...

அவர் இறந்தபோது அலுவலகமே அழுதது. அவர் இருந்த தெருவே அழுதது. இந்த மானேஜர்தான் நம்பிக்கைக்குரிய சகா இறந்த துக்கத்தில் சத்தம்போட்டு அழுதார். நண்பர்களை மட்டுமே சம்பாதிக்கத் தெரிந்த அவர் குடும்பத்திற்கு வறுமையையே சோறாக உண்ணவேண்டிய நிலைமை ஏற்பட்ட போது, இந்த மானேஜரின் சிபாரிசினால்தான் கம்பெனி மேலிடம் மனிதாபிமானத்தைக் கருதி, பட்டதாரியான இந்த அக்காவிற்கு வேலை போட்டுக் கொடுத்தது. ஓராண்டுக் காலமாக தன் சுமையைப் பிறரிடம் சுமத்தாமல், 'மூட்' என்பது ஒரு தொத்துஞ் சுமாச்சாரம் என்பதை அறிந்தவள்போல், தாய்மையின் கனிவோடு பணிபுரிபவள் இந்த அக்கா... அவளைப்போய்...