பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

வெளிச்சத்தை நோக்கி...


சுரைக்காய் கூடுபோல் மாறியது. ஒளி சிந்திய கண்கள், பழி சுமந்து நிற்பதுபோல் விழி விலகி, தெறித்து விடுவதுபோல் நின்றன. சமையலறையில் இருந்து அப்படியே அலுவல கத்திற்கு வந்துவிட்டது போன்ற தோற்றம்.

அவள் வந்து நின்றதும், மானேஜர், 'பிஸி'யாக இருப்பது போல், 'இண்டர்காமில்' யாருடனோ பேசினார். டெலி போனைச் சுழற்றினார். ஏதோ ஒரு ஃபைலை எடுத்து, கலர் பென்சிலால் கோடு போட்டுக் கொண்டே படித்துக் கொண்டார். அவளை உட்காரச் சொல்லவில்லை. கால்மணி நேரம் வரை காத்து நின்ற வாணி, 'சார்' என்றாள். அப்படிச் சொல்லும்போதே வாய் சிக்கியது. கண்கள் பெருக்கெடுத்தன.

மானேஜர் தலையை நிமிர்த்தாமலே 'யெஸ்' என்று அடித் தொண்டையில் கேட்டார். பிறகு இருவரும் பேசவில்லை. இன்னும் ஒரு ஐந்து நிமிடம் இழுபறியில் ஓடியது. ஃபைலை மூடி 'டிரேயில்' தூக்கியெறிந்து விட்டு, கைக் குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டு அவளைச் சிறிது நேரம் இளக்காரமாகப் பார்த்தார். அவள் நின்றவிதம், அவருக்குக் குறுகுறுப்பைக் கொடுத்திருக்க வேண்டும். நிதானமாகக் கேட்டார்.

"என்னம்மா. ஃபைல் கிடைச்சுதா?"

பதிலில்லை.

"அது டெண்டர் ஃபைல், நாம் 'கோட்' செய்த ரேட் வேற கம்பெனிக்கு தெரியக்கூடாதுன்னு சொல்லித்தான் அந்த கான்பிடன்ஷியல் ஃபைலை ஒங்ககிட்ட கொடுத்தேன். நல்ல வேளையா ஒங்ககிட்ட கையெழுத்து வாங்கிட்டேன்.இல்லன்னா... ஆல்ரைட் ஃபைலை என்ன செய்திங்க... இது ஒரு பெரிய மோசடி தெரியுமா?"

வாணி அழுகையை அடக்கிக் கொண்டு, அது வெளிப்பட முடியாதபடி, நிதானமாக ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி விட்டுப் பேசினாள். 'ஸார்... நான் மோசடி பட்டுத்தான் பழக்கமே தவிர... மோசடி செய்து