பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 73


ஒன்று உடம்பெங்கும் பரவி, தொண்டைக் குழியில் வேர்விட்டு, தலையில் முளைவிட்டு, காலில் கிளைவிட்டு, உடலெங்கும் வியாபித்திருப்பது போன்ற சுமையுணர்வு. அந்த உணர்வுச் சுமையை சுமக்கவும் முடியாமல், இறக்கவும் முடியாமல் கொட்டக் கொட்ட விழித்திருந்தான். விழித்த கண்கள் பார்க்கவில்லை. கனத்த நெஞ்சம் நினைக்கவில்லை.

தெரு உறங்கியது. சத்யாவும் உறங்கியிருக்க வேண்டும். குறைந்தபட்சம், அவள் சத்தமாவது உறங்கியிருக்க வேண்டும். உறக்கமோ... உறைவோ.. நிசப்தமோ... நிர்மலமோ... தூக்கமோ... துக்கமோ... எல்லாமே சூன்யப்பட்டு அவன் ஒருவன் மட்டும் இருப்பதுபோன்ற பிரமை. அவன் ஒருவன் மட்டும் சூன்யமாகி, அனைத்தும் ஆனந்தக் கோட்டில் இயங்குவது போன்ற பேதமை.

(11)

நள்ளிரவு நேரம் கரப்பான் பூச்சி ஒன்றை, பல்லி ஒன்று பின்புறமாகப் பிடித்து, சுவரில் வைத்து 'டக் டக்' கென்று அடித்துக் கொண்டே, பற்றிய பூச்சியை உயிரோடு பின்புறமாகத் தின்று கொண்டிருந்தது. தெருவோர தூங்கு மூஞ்சி மரத்தில் துயில் கொண்ட காகங்கள், காலையில் கரையவேண்டிய அந்தக் கரும்பறவைகள், பாம்பைப் பார்த்தோ அல்லது மெதுவாக மரமேறி வந்த பூனையைப் பார்த்தோ, மரத்திலிருந்து விடுபட்டு அலங்கோலமாக ஓலமிட்டுக் கொண்டிருந்தன. ஏதோ ஒர் அடையாளம் காண முடியாத பறவையின் ஓலம் - சத்யாவின் ஓலத்தைப் போல. பல்லி, கரப்பான் பூச்சியின் பாதி உடம்பை விழுங்கிவிட்டது, அவனைப் பிடித்த விமலாவைப் போல... தெரு நாய் ஒன்று,