பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 77

மெய்யப்பன் வயிற்றைப் பிடித்துக் கொண்டான். கூரை விழாமல் இருக்க, தலையை கைகளால் மூடிக் கொண்டான். கால்கள் பாதாளத்தில் போகாமல் இருக்க, கால்களை ஒன்றை மாற்றி ஒன்றாகத் தூக்கிக் கொண்டான். கட்டில் பாடையாக மாறாமல் இருக்க, அதைச் சாத்தி வைத்தான். கண்களில் கண்ணாடித் துகள்கள் அழுத்தாமல் இருக்க, விளக்கை அணைத்துக் கொண்டான். ஆனாலும்....

பாதாளத்திற்குள் போவதை, கூரை விழுந்து குற்றுயிராய் கிடப்பதை, பாடையில் போவதை, நாய் கெளவும் நாசத்தை, அவனால் உதற முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மையமாக, விமலாவைப் பற்றிய நல்லதும் கெட்டதும் அற்ற எண்ணத்தை அவனால் நீக்க முடியவில்லை. கண்களை அகலப்படுத்தினான். விமலா அவற்றை ஊசியால் குத்தி வெளியே எடுப்பதுபோன்ற பிரமை.

எப்படி இந்தப் பீதி வந்தது என்று அவனுக்குப் புரியவில்லை. இதிலிருந்து விடுபட முடியுமா என்பதும் தெரியவில்லை. பைத்தியமாகி விட்டோமோ என்கிற சந்தேகம். இந்த அறை பைத்தியக்கார ஆஸ்பத்திரியின் ஒரு வார்டோ என்ற கற்பனை.

அவனுக்கு, தான் நினைக்கும் உணர்வுகளுக்கு ஆதாரமில்லை என்பது புரிகிறது. அவை போலி உணர்வுகளே என்பதும் தெரிந்தது. ஆனாலும், அவற்றை நினைக்காமல் இருக்க முடியவில்லை. எண்ணங்களே பாம்புகளாக அவன் நெஞ்சை சதையோடு சேர்த்துத் தின்றன. காலையில் சரியாகிவிடும் என்ற ஆறுதல். அப்படி ஆகுமா என்ற ஆதங்கம். வினாடியே யுகமாகியபோது, இரவுவரை தன்னால் தாக்குப் பிடிக்க முடியுமா என்ற சந்தேகம். உயிர் போகும்போது, இப்படித்தான் இருக்குமோ என்ற மரணப்பயம்.

சாமக்கோழி கூவுவது வரைக்கும், கட்டிலில் இருந்து தரையில் விழுந்து நாற்காலியில் சாய்ந்து, வயிற்றைப் பிடித்து,