பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 79

இரவு அனுபவித்த உணர்வுகள் கனவல்ல, நிஜமாகிப் போன கற்பனை என்பதை உணர்ந்து, திடுக்கிட்டு எழுந்தான். தண்ணீர் குடிக்கப் போனான். பயம் பிடித்துக் கொண்டது. எடுத்த டம்ளரைக் கீழே போட்டுவிட்டு, அவசர அவசரமாகக் குளியலறைக்குப் போய் கை கால் அலம்பிவிட்டு வெளியே வந்தான். கதவைக்கூட சாத்தவில்லை.

காம்பவுண்ட் கதவின் அடியில் தலையைத் திணித்துக் கொண்டு, அந்த சொறிநாய் இன்னும் அங்கேயே கிடந்தது. அவனுக்கு, மீண்டும் குடல் வெளியே வந்து, அதை அந்த நாய் இழுப்பது போன்ற சாவெண்ணம். ஒரு கல்லை எடுத்து அந்த நாய் மீது வீசப்போனான். பிறகு.தூக்கிய கல்லை கீழே போட்டுவிட்டு, மேற்குப் பக்கமாக நடந்தான். அவன் வழக்கமாகச் செல்லும் டீக்கடைக்குப் போனான். உள்ளே போய் கடை முதலாளியிடம் 'எந்தா... நாயரு.' என்று மலையாள பாணியில் 'காலை வணக்கம்' சொல்லும் அவன், இப்போது வெளியே நின்று கொண்டான். டீக்காரர் கண்ணாடி டம்ளரை எடுத்தார். பிறகு, அவன் பிரசன்னத்தை அங்கீகரித்தவர் போல் ஒரு பீங்கான் குவளையை எடுத்தார். அதில்தான் அவன் 'டீ' குடிப்பது.

மெய்யப்பன், எதுவும் பேசாமல், இருபத்தைந்து பைசாவை மட்டும் கல்லாவில் வைத்துவிட்டு, கூனிக்குறுகி நின்றான். உள்ளே, இரண்டு மூன்று தொழிலாளர்கள் தமாஷாகப் பேசிக் கொண்டிருப்பது கேட்டது.

"ஒன்னெல்லாம் சும்மா விடப்படாதுடா... இந்த பாய்லர் அடுப்புக்குள்ள ஒன் தலையைத் திணிக்கணும்."

"அப்டில்ல மச்சான்... தலைகீழ தூக்கிட்டுப்போய், கழுத்து வரைக்கும் நெருப்புல முக்கணும்... அப்போகூட இவனுக்குப் புத்தி வராது."

மெய்யப்பன் பேசியவர்களைப் பார்க்கவில்லை. பாய்லர் அடுப்பையே பார்த்தான். நெருப்பு, துண்டு துண்டாக, கட்டிக் கட்டியாகச் செம்மை நிறத்தில் மின்னியது. அவன் மனதில்