பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 வெளிச்சத்தை நோக்கி...

"ஒனக்குப் புத்தி இருக்காடா..? இன்னுமா... விமலாவை மறக்காமல் இருக்கிறே...?"

"அவளை மறக்கவும் இல்ல. நினைக்கவும் இல்ல. அவள் ஒரு பொருட்டே இல்ல. நான் சொல்ல வந்தது வேறடா."

"விமலா போய், வாணி வந்திருப்பாள். அவளும் போய் வேற ஒருத்தி வந்திருப்பாள். ஒனக்கும் வேற வேலை இல்லை... அவளுகளுக்கும் வேற வேலை இல்லை... உருப்படியாய் ஏதாவது பேசு.... இல்லன்னா... நான் பேசுறதையாவது கேளு."

"சொல்றதைக் கேளு... நைட்ல தண்ணி குடிக்கப் போனேன். அது அக்கினித் திரவமாகத் தெரியுது. கட்டிலில் படுத்தால், பாடையில் யாரோ என்னைத் தூக்கிட்டுப் போற மாதிரி தோணுது... அப்புறம் ஒரே பயமயம்... சொல்ல முடியாத பயம்... இந்த மாதிரியான நினைப்புகளுக்குச் காரணமில்லன்னு நல்லாத் தெரியுது... இருந்தாலும் அப்படி நினைக்காம இருக்க முடியல... கூரை இடிந்து தலையில் விழுந்தது மாதிரி ஒரு எண்ணம்."

குமார் அவனை ஆச்சரியமாகப் பார்த்தான். சிறிது பரிகாசமாகக்கூட நோக்கினான்.

"அதெப்டிடா வரும்? நம்மை மீறி... எப்டி அப்படிப்பட்ட எண்ணம் வரும்? நான்கூடத்தான் இந்த கட்டில பார்க்கேன். எனக்கு பாடை மாதிரி தோணலியே... கூரை எப்படிடா விழும்? நம்மாலத்தான் அதை விழ வைக்க முடியுமா? நல்ல ஆளுடா... சீக்கிரமா ஆபீஸுக்குப் போ... சரியாயிடும்... அப்புறம் ஏதாவது சினிமாவுக்குப் போ..."

"நீ நினைக்கிறது மாதிரி சிம்பிள் விவகாரம் இல்லடா..."

"ஒன் புத்தி ஒன்னைவிட்டுப் போகாதுடா... சிம்பிள் விவகாரத்தையும் சிக்கலாய் பண்றதுல... நீ நிபுணன்."

"டேய்.... நான் சொல்றது ஏண்டா ஒனக்குப் புரிய மாட்டேங்குது."