பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


கத்தரிச்செடி


’கத்த ரிச்செடி’ யென்ப
தென்பெயர்தான் - தோட்டக்
காலென் பிறப்பிடமும்!
‘சத்துடன்சுவை மெத்த
வுடையதெனக் - காயைச்
சமைத்த ருந்திடுவார்!

கொஞ்சம் கத்தரிப் பிஞ்சுக்
குழம்பெனவே - கேட்கும்
கொழுநன் குறிப் பறிந்து,
நெஞ்சு நிறைவுடன் வஞ்சிக்
கொடி நிகர்ப்பாள் - காய்கள்
நேர்ந்து வாங்கிடுவாள்.

’கத்த ரிக்கிணை யான
காய்களையாம் - எங்கும்
கண்டதில்லை யெனச்
சித்த ரென்பவர் தெளிந்து
செப்புகிற - இந்தச்
செய்தி தெரிந்தது தான்.

நித்தம் முணக்குடன் மொத்தம்
நீக்கியெழும் - நாக்கு
நீள மானவரும்
சுத்தக் கத்தரிப் பிஞ்சுக்
கறி யெனவே - வாய்நீர்

சொட்டச் சுவைத்துண்பர்!
137