பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/194

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்

பின்னிணைப்பு-1


வாழ்விலிருந்து இலக்கியம்

- கவிஞர். தங்க. முருகேசன்

மாவட்டத் துணைத் தலைவர்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

கோவை (மேற்கு) மாவட்டம்


தமிழ்க் கவிதை உலகம் மரபுகளை விட்டு விலகி வெகுதுாரம் சென்றுவிட்டது. இருப்பினும் முற்றிலுமாக மரபுகளைப் புறந்தள்ளிவிட்டு நவீன கவிதை உலகை நிர்மாணித்தல் என்பது அடிக் கட்டுமானம் இன்றி எழுப்பப்படும் மாளிகையைப் போன்றதாகும்.

ஊடகங்களின் இறுக்கத்தில், எல்லாம் இயந்திரமயமாகிப் போன பொருளியல் வாழ்வியலில், கருத்தியல் வாழ்வியலின் மரபு சார்ந்த இலக்கியம் சாத்தியம்தானா, என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

மூச்சு முட்டும் வாழ்க்கை ஓட்டத்தின் தொடர்ச்சியாக உயர உயரப் பறந்தாலும் ஆசுவாசப்படுத்திக்கொள்ள பூமிக்கு வந்து தானே ஆகவேண்டும். அப்படியான நேரங்களில் இப்படியான மரபு சார்ந்த இலக்கியங்களை வாசித்தாலே போதும் தமிழ் இலக்கியம் தழைத்து வளரும்.

இலக்கியம் என்பது வெறும் கற்பனைச் சிறகுகளின் கனவுத் தொகுப்பல்ல. வாழ்வின் அகம் புறம் சார்ந்த மெய்யியல் வெளிப்பாடு. ஆகவேதான் இலக்கியம் சத்தியத்தின் மறு உருவமாகப் பார்க்கப்படுகிறது. இலக்கியம் வரலாற்றுப் பதிவாகவும், தலைமுறை கடந்து மனித குலத்தின் வாழ்வியல் படி நிலைகளின் ஆவணமாகவும் திகழ்கிறது. கலையும் இலக்கியமும் சமுதாயத்தின் பிரதிபலிப்போடு காலத்தின் குரலாகவும் ஒலிப்பது.

192