பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்களுக்குப் பிடித்தது சனி, அவனுடைய மனைவியும்,இரண்டு குழந்தைகளும் அனாதையாகி விடுவர், "சாட்சி சொல்லாதே" என்று சிலரும், அவனைத் தூக்கு மேடையில் ஏற்றியே ஆகவேண்டும், "சாட்சி சொல்" , என்று சிலரும் அம்மாவைப் பந்தாடினர்!

" நீங்கள் ஒரு கெளரவமிக்க எழுத்தாளரின் மனைவி. எதிர்க்கட்சி வக்கீல் கேட்கும் கேள்விகளைத்தாங்க மாட்டீர்கள்" என்ற அறிவுரை வேறு வழங்கப்பட்டது. யாருக்காகப் பேசுவது? இரவோடு இரவாக கொலையாளிகளைப் போல ஊரை விட்டு ஓடி வந்தோம்.

கோர்ட்டில் அம்மா சொன்னார். "நான் சரியாகக் கொலையாளியைக் கவனிக்க வில்லை", என்று! நன்மை பயக்குமானால் பொய் சொல் என்ற வள்ளுவர் வாக்கின்படி அவன் விடுதலையாகி மனைவி மக்களோடு சுகமாகக் குடித்தனம் நடத்துகிறான். ஆனால் எங்களின் கதி !

மீண்டும் எந்த ஊர். எந்த நாடு என்ற தேடல். சாஸ்திர சம்பிரதாயமற்று, மலர்மாலைகள் இன்றிக் கதர் மாலைகளோடு சீர்திருத்தத் திருமணம், என் சகோதரிக்கு மிகச் சிக்கனமாக நடந்தேறியது. ஒரு பெண்ணைக் கடைத்தேற்றி விட்டோம் என்று என் அன்னை பெருமூச்சு விட, அந்தக் காற்றையும் அபகரிக்கக் காலன் காத்திருந்தான். அங்குச் சுற்றி இங்குச் சுற்றி சந்தேகவுண்டன்பாளையம் என்ற கிராமத்தில் அப்பா அடைக்கலமானார்.

எவ்வளவு அழகான கிராமம் அது! நொய்யல் நதியின் தெளிந்த நீரும், கரையில் அடர்ந்த மாமரங்களும், தென்னை, பாக்கு, வாழை, மஞ்சள் என்று எங்கு காணினும் பச்சைப் பசேல் என்ற பசுமை.

சம்மந்தக் கவுண்டர் என்ற பெரியதனக்காரர் வீட்டிலிருந்து அப்பாவுக்கு உணவு வந்தது வகை வகையான பதார்த்தங்களோடு. சில நாட்களில் என்னையும் அப்பா அங்கு அழைத்துச் சென்றார். பதினைந்து குழந்தைகள். முப்பது ரூபாய் மாதவருமானம். நான் போய் ஒரு வாரம் போல இருக்கும். அந்த வீட்டுப் பெண்ணும் என்னோடு படித்துக் கொண்டிருந்தாள். அவளோடு அவர்கள்

43