பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்




விளக்கம்

எந்தை தேடிய இல்லத்தி லேயிருள்
இரவு தோறு மிருந்திடு மாயினும்
சிந்தை யென்னுமென் சொந்தஇல் லத்தினைச்
செப்பனிட்டுச்சீராகத் திருத்தினேன்.

உறுவ தோரவு முள்ளதை யோரவும்
உலக மூர்ந்த இயல்பினை யோரவும்
அறிவ தறியு மவசிய மாகவே
ஆய்வெ னும்விளக்கேற்றினேன் நானிதில் !

இமயந் தொட்டுக் குமரி முடியவும்
இன்று மக்க ளுறுதுயர்க் கேதெதென்
றமைதி யாக அமர்ந்ததில் பார்க்கவும்
அகமும் புறமு மடங்கக் கொதித்தன !

தந்திரத்தில் தலைமை வகித்தவர்
தமது சொந்த நலத்தின் நிமித்தமாய்
மந்திரம்மதம் தெய்வம் விழாவெனும்
மாண்பி லாமை பரப்பினர் மாளவே !

தண்டந் தன்னில் தலைமை வகித்தவர்
தமது சொந்த நலத்தின் நிமித்தமாய்
சண்டை சச்சர வாட்சிச் சனியனால்
சாவு துக்கம் பரப்பினர் சாலவே !

தங்கள் காசில் தலைமை வகித்தவர்
தமது சொந்த நலத்தின் நிமித்தமாய்
எங்கும் வாங்க லிறக்கியே விற்றலை
ஏற்றி யேழ்மை பரப்பின ரேங்கவே !

தட்டிப் பேசஆ ளற்ற தரணியில்
தலைமை தாங்கிய மூவின மாக்களும்
சட்டம், சாதி, சமயங்கள், சந்தையால்
சாது மக்களைச் சார்ந்து பிணித்தனர்.

90