பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

வள்ளியம்மாள் கல்வி அறம்


சித்திரை நிலவென, முத்திரை பதித்திருக்கும் பத்தரை மாற்றுத் தங்கமாய், விஞ்ஞானம் விரிந்து அஞ்ஞானம் அழிந்து தன்ஞானம் தழைத்து எஞ்ஞான்றும் மிளிர்ந்து இருக்கக்கூடிய இஞ்ஞாலத்திலே அதுவிரிக்கும் காலத்தின் கோலத்திலே உள்ளத்தின் ஆழத்திலே வீற்றிருக்கக் கூடிய ஆற்றலுடையது எது என்றால் தாய்மை ஒன்றுதான். அத்தகைய பெண்மைக்குப் பெருமை தரக்கூடிய வகையில் இக்கல்லூரி விளங்குகிறது.

“ஆணுக்குப் பெண் நிகர்” என்று கூறினாலும் கூட, பெண்களே பெண்களை அடிமைப் படுத்தும் நிலை முதலில் மாற வேண்டும். இந்நிலை மாற வேண்டுமெனில் தலைமுறைகள் மாறவேண்டும். பெண்களின் சிறப்பினை நோக்குமிடத்து நாட்டுக்கு, வீட்டுக்கு, நதிக்கு, பூமிக்கு, படிப்புக்கு, பண்புக்கு என்று சுட்டியதோடு அலைமகள், கலைமகள், மலைமகள், அஷ்டலஷ்மி பெயர்கள் உட்படப் பெண் தெய்வங்களாகவே குறிப்பிடுகிறார்கள். அதனால் தானோ என்னவோ பெண்களைப் பூட்டி வைத்து விட்டனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆவதும் அழிவதும் பெண்ணாலே என்பார்கள். ஆனால் நன்மையை ஆக்குவதும் பெண்; தீமையை அழிப்பதும் பெண் என்றும் பொருள் கொள்ளலாம். அடிக்கடி 'பெண் புத்தி பின்புத்தி' என்பர். ஆனால் தமிழில் 'பின்' என்பதற்குக் "கூர்மை என்ற பொருளும் இருக்கிறது. ஆகவே கூர்மையான புத்தி என்பதை மாற்றித் திரித்துக் கூறியிருக்கிறார்கள்.

உலகத்திலே என்றும் பெண்கள் உயர்ந்த இடத்தைப் பெற்றவர்கள் தான் என்பதற்குச் சான்றாக, ரஸியா பேகம், ஜான்சிராணி, அன்னை தெரசா, நைட்டிங்கேல், ஔவையார், காரைக்கால் அம்மையார், இன்னும் பல பத்தினிகள், தியாகிகள் என்று குவிந்து இருந்த காரணத்-