பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

தவிக்கும் உள்ளம் என்னத்தைப் பேசிவிடப் போகிறது? பேசினால் ஊமையன் பேச்சுத்தான்.

இந்நிலையில்தான் நண்பர் தொண்டைமான் வருகிறார். மெல்ல நம்முடைய கையைப் பிடித்துக்கொண்டு கோயிலின் கோபுர வாசலுக்கு அழைத்துக்கொண்டு போகிறார். இது பெரிய காரியமில்லை. நமது உள்ளத்தைக் கோயிலின் அடித்தலமாக, அதன் பொருளாக, அதன் சோபையாக விளங்கும் சத்திய உலகத்தின் வாசலுக்கே, அதன் கருவறைக்கே அழைத்துப் போக முயல்கிறார். அங்கே, புராணமும், வரலாறும், சமயமும், கலையும், இலக்கியமும் ஒன்றாகக் கலந்து, ஒரு ஞானக் காட்சியை அமைக்கின்றன. அதைத் தொண்டைமான் காட்டுகிறார். இந்தக் காட்சியை அனுபவமாக மாற்றும் சித்து விளையாட்டும், தொண்டைமான் உதவியால் நமக்குக் கிடைக்கிறது. அப்போதுதான் நம்முடைய ஊமை உள்ளமும் பேசத் தலைப்படுகிறது. இதையெல்லாம் நமக்குக் கொஞ்சங்கூட சிரமமில்லாமல், ஆயாசமில்லாமல் இந்த மனிதர் செய்து விடுகிறார் என்றால், அதை ஒரு சாதனை என்று பாராட்டுவதிலே தவறென்ன? ஆம். நண்பர் தொண்டைமான் கையில், சமயம் வெறும் சித்தாந்தமாக இல்லாமல் சுவை பொருந்திய அனுபவம் ஆகிறது. தலைவலியைத் தவறாமல் தரக்கூடிய தத்துவ விசாரமும், வரலாற்று ஆராய்ச்சியும், தெளிந்து, எளிமையினும் எளிமையாகி, தேனாக ஓடுகின்றன. கல்வெட்டு கூடகதையாகிறது. அப்படியென்றால் இலக்கியத்தைப் பற்றிக் கேட்பானேன். அது மணங்கமழும் மெல்லிய பூங்காற்றாக நம் இதயத்தை வருடுகிறது.

“அதெல்லாம் சரிதான், ஐயா! இருந்தாலும் ஏதோ எளிமைக்காக, சுவைக்காக இப்படிக் கடவுளரை பற்றியெல்லாம் வேடிக்கை வேடிக்கையாகப் பேசி விடலாமா? பாருங்களேன் அவர் சொல்வதை: ‘மனைவியுடன் பிணங்கிக் கொண்டதன் பலன் வேங்கடேசனுக்குச் செருப்பு