பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

வேங்கடம் முதல் குமரி வரை

கள்ளார்ந்த பூங்கொன்றை
மதமத்தம் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடி எம்
பெருமானார் உறையும் இடம்
தள்ளாய் சம்பாதி சடாயு
என்பார்தாம் இருவர்
புள்ளானார்க்கு அரையனிடம்
புள்ளிருக்கு வேளூரே,

என்பதுதானே அவர் பாடிய தேவாரம். சடாயு குண்டத்தைக் கடந்து வரும் வழியில், செவ்வாய்க் கிரஹம் ஆன அங்காரகனது உற்சவமூர்த்தத்தையுமே கண்டு வணங்கலாம். நீங்கள் கோயிலுக்குப் போன நாள் செவ்வாய்க்கிழமையாக இருந்தால் சிறப்பான அலங்காரத்தைக் காண்பதுடன், விசேஷமான நைவேத்தியங்களும் இங்கு கிடைக்கும். தலத்தில் நவக்கிரஹங்கள் ஒருவரை ஒருவர் வக்கரித்துக் கொண்டிருப்பதில்லை. சூரியனுக்கும் அங்காரகனுக்கும் தனித்தனி சந்நிதி அமைத்து விட்டதால், மற்ற ஏழு பேரும் கைகட்டி வாய் பொத்தி வரிசையாக கீழைத் திருமாளிகைப் பத்தியில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

இவர்களைப் பார்த்தபின் நடந்தால் தெற்கு நோக்கி அருள் பாலித்துக் கொண்டிருக்கும் தையல்நாயகியிடம் வருவோம். தையல் நாயகி நல்ல அழகான வடிவம், கரும்புருவச் சிலை, வரிக்கயல் விழி, வள்ளைவார் காது, முல்லை அரும்பும் இளநகை, செங்கனிவாய், பிறைநுதல் எல்லாம் படைத்தவளாய்ப் புள்ளூர் மேவும் இந்த வாலாம்பிகையை வணங்கிவிட்டு வடக்கு நோக்கிப் போகலாம். அங்கு தானே சண்முகர் சந்நிதி இருக்கிறது. இந்தச் சண்முகரின் உற்சவ மூர்த்தமே செல்வமுத்துக் குமாரர். இவர் உண்மையிலே நல்ல செல்வந்தர். அதிலும் கார்த்திகை தினத்தன்று நடக்கும் சந்தனாபிஷேகம், அலங்காரம் எல்லாம் கண் குளிரக் காண வேண்டியவை,