பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

137

திரிபுராந்தகர் எல்லாம் நல்ல சோழர் காலத்துச் செப்புப் படிமங்கள்; அழகானவை. இவைகளையெல்லாம் தூக்கி அடிக்கும் அன்னையின் வடிவம் ஒன்றும் இங்கு உண்டு. சாதாரணமாக அன்னையையும் அத்தனையும் சேர்த்துச் சமைத்து இருவருக்கும் இடையிலே கந்தனை நிறுத்தி அந்த மூர்த்திக்கு சோமாஸ்கந்தன் என்று பெயர் சூட்டி வைத்திருக்கும் கோலமே அநேகம். ஒவ்வொரு கோயில் பிரம்மோற்சவத்துக்கு எழுந்தருளப் பண்ணும் வடிவம் இந்த சோமாஸ்கந்த மூர்த்தம் தானே. இங்கே அன்னை மடிமீது தவழ்ந்த முருகன் அவசரம் அவசரமாக இறங்கி எங்கோ ஓட முயலும் நிலை. அன்னை பார்வதி ஒரு காலைத் தூக்கி வைத்து ஒருகாலைத் தொங்கவிட்டு ஒயிலாக இருக்கிறாள். ஓட விரும்பும் பாலனைத் தன் பக்கம் இழுத்துத் தழுவ முனையும் நிலையைச் சிற்பி அற்புதமாக வடித்திருக்கிறாள். இந்தத் தாயையும் சேயையும் சேர்த்து வடிக்கத் தோன்றிய கலைஞனது கற்பனை உயர்ந்தது. இந்தச் செப்புப் படிமம் ஒன்றைக் காணவே இக்கோயிலுக்கு ஒரு நடை போய் வரலாம்.

பல்லவனீச்சுரர் கோவிலில் நிற்கும்போதே நம்மிடம் அங்குள்ளவர்கள் சொல்லுவார்கள்