பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

17

முன்னாலேயே, ஆம். உலகம் தோன்றி, அதில் மனிதன் தோன்றித் தமிழ் பேசக் கற்றுக்கொண்ட அந்தக் காலத்திலேயே, அவன் கண்ட முதற் கடவுள் முருகனே. உருவமே இல்லாத கடவுளுக்கு உருவத்தைக் கற்பிக்க முனைந்த தமிழ்க்கலைஞன் கண்ட முதற்கடவுள், முருகனாக, இளைஞனாக, அழகனாக உருப் பெற்றிருக்கிறான்.

இதனால்தான் முருகனை நினைத்தால், அவன் ஏறி வரும் மயிலை நினைக்கிறோம். 'எட்டும் குலகிரி எட்டும் விட்டோட எட்டாத வெளி மட்டும் புதைய விரிக்கும் கலாப மயூரத்தன்' என்று கவிஞர்கள் முருகனை அழைத்திருக்கிறார்கள். இப்படி விரித்த தோகையோடு கூடிய மயில்மேல் வருகிறான் அவன் என்று எண்ணினாலும், சிற்ப வடிவங்களிலே விரியாத தோகையோடு கூடிய மயிலையே வடித்திருக்கிறார்கள். இதனாலேயே எங்கேயாவது ஒரு சிறிய குன்று, ஒரு பக்கம் உயர்ந்தும், மறுபக்கம் தாழ்ந்தும் மயில் தோகையைப் போல் படிந்தும் கிடந்தால், அந்தக் குன்றின் பேரிலே முருகனைப் பிரதிஷ்டை செய்யத் தமிழர்கள் மறக்கவில்லை . இத்தகைய குன்றுகளில் இரண்டு பிரபலமானவை. ஒன்று காரைக்குடியை அடுத்த குன்றக்குடி. இரண்டாவது தென்ஆர்க்காட்டு மாவட்டத்தில் விழுப்புரத்துக்கும் திண்டிவனத்துக்கும் இடையே உள்ள மயிலம். இரண்டிடத்தும் குன்றுகள் படிந்த தோகையை உடைய மயில் போலவே இருந்தாலும், பின்னுள்ள தலத்தையே மயிலம் என்று பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள். முருகன் ஊர்ந்துவரும் மயிலோடு தொடர்புபடுத்தியுள்ள தலம் இது ஒன்றுதான் என்று அறிகிறோம். இந்த மயிலம் என்ற தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

தொண்டை நாட்டின் வடகோடியிலுள்ள வேங்கடத்தில் துவக்கிய நமது பயணத்தில், தொண்டை நாட்டின் பல தலங்களையும் பார்த்துவிட்டு, நடுநாட்டுக்குள்

வே.மு.கு.வ -2