பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/212

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

தரன் வீடுவரை நடந்து பொங்கல் திருடி அவசரம் அவசரமாக எடுத்து வந்து உண்டிருக்கிறான் இவன்.

இந்தக் கண்ணபுரத்தானைப் பெரியாழ்வார், குலசேகரர், மங்கை மன்னன், நம்மாழ்வார் நால்வரும் மங்களா சாஸனம் செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து பாடிய பாடல்கள் 128 என்றால் அதில் 104 பாடல்கள் திருமங்கை மன்னன் பாடியவை. கலியனான திருமங்கை மன்னனுக்கு இக்கண்ணபுரத்து அம்மானிடம் உள்ள ஈடுபாடு எழுத்தில் அடங்காது. நாயகநாயகி பாவத்தில் திருமங்கை மன்னன் பாடியபாடல்கள் பிரசித்தமானவை.

'பேராயிரம் உடைய பேராளன்
பேராளன்' என்கின்றாளால்;
'ஏரார் கனமகா குண்டலத்தன்.
எண்தோளான்' என்கின்றாளால்;
‘தீரார் மழைமுகிலே நீள்வரையே
ஒக்குமால்' என்கின்றாளால்;
காரார் வயல் அமரும் கண்ண புரத்து
அம்மானைக் கண்டாள் கொல்லோ.

என்ற பாடல் எவ்வளவு சுவையுடையது.

மங்கை மன்னனுக்குச் சளைக்காமல் நம்மாழ்வாரும்

அன்பனாகும், தன்தாள்
அடைந்தார்க்கு எல்லாம்,
செம்பொன் ஆகத்து
அவுணன் உடல் கீண்டவன்
நன்பொன் ஏய்ந்த மதில்சூழ்
திருக்கண்ணபுரத்து
அன்பன், நானும் தன்
மெய்யர்க்கு மெய்யனே

என்றே பாடுகிறார்.