பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/254

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

வேங்கடம் முதல் குமரி வரை

இடத்துக்கு வந்து விசாரசருமனை அடிக்கிறான்; அங்குள்ள பால் குடங்களைக் காலினால் இடறுகிறான். விசாரசருமன் கோபங்கொண்டு தன் பக்கலில் உள்ள கோலை எடுக்க, அது மழுவாக மாற, அந்த மழுவினால் தந்தையாம் எச்சத்தன் காலையே வெட்டுகிறான். வெட்டுண்ட காலுடன் எச்சத்தன் கீழே விழுந்து மடிகிறான். சிவபூசைக்கு இடையூறு செய்தவனைத் தந்தை என்றும் பாராமல் வெட்டி வீழ்த்திய விசாரருமனுக்கு இறைவன் ரிஷபாரூடனாகக் காட்சி தருகிறான். தந்தையற்ற அத்தனையனைத் தன் மகனாகவே ஏற்றுக் கொள்கிறான். இத்துடன் தான் உண்ட பரிகலம், உடுக்கும் உடை, சூடும் மாலை, அணிகள் முதலியவற்றைக் கொடுத்துத் திருத்தொண்டர்களுக் கெல்லாம் தலைவனாக்கி சண்டீசப்பதவியையும் அருளுகிறான். தன் சடை முடியிலிருந்த கொன்றை மாலையையே எடுத்துத் தன் மகனாம் சண்டீசனுக்குச் சூட்டுகின்றான் இறைவன். இதனைப் பாடுகிறார் சேக்கிழார்,

அண்டர் பிரானும், தொண்டர் தமக்கு
அதிபன் ஆக்கி, அனைத்து நாம்
உண்டகலமும், உடுப்பனவும்
சூடுவனவும், உனக்காகச்
சண்டீசனுமாம் பதந்தந்தோம்'
என்று அங்கு அவர் பொன்தட
முடிக்கு துண்டமதிசேர் சடைக்கொன்றை
மாலை வாங்கிச் சூட்டினார்.

என்பது சேக்கிழார் தரும் சொல்லோவியம். இச்சொல் லோவியத்தைக் கல்லோவியமாகக் காண சேய்ஞலூரில் உள்ள சத்தியகிரி ஈசுவரர் கோயிலுக்குப் போய்ப் பிரயோசனமில்லை. அதைக்காணும் ஆவல் உடையவர்கள் எல்லாம் சென்று காண வேண்டியது அந்தக்கங்கை கொண்ட சோழபுரத்துக்கே. அங்கேயே செல்கிறோம் நாம் இன்று.