பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/256

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

வேங்கடம் முதல் குமரி வரை

மகனான ராஜேந்திரனோ, வடநாட்டில் கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியவன், கிழக்கே மலாயா வரை சென்று கடாரத்தையும் கைப்பற்றியவன். அதனாலே அவன் கங்கை கொண்டான் என்றும் கடாரம் கொண்டான் என்றும் பாராட்டப் பெற்றிருக்கிறான் சரித்திர ஆசிரியர்களால். தந்தை ஒரு கோயில் கட்டினான் என்றால் தனயனும் ஒரு கோயில் கட்ட முனைகிறான், அக்கோயிலில் பிரதிஷ்டை செய்திருக்கும் பிருஹதீசுவரருக்குக் கங்கையிலிருந்தே நீர் கொண்டு வந்து குடமுழுக்குச் செய்ய விழைகிறான். இப்பணியை நிறைவேற்றத் தன் படை வீரர்களை ஒரு மாதண்ட நாயகன் தலைமையில் அனுப்பி வைக்கிறான். அம்மாதண்ட தாயகனும் இடையில் உள்ள தெலுங்குநாடு, வேங்கி நாடு, தென்கோசலம், வங்காளம் முதலிய நாடுகளையும் வென்று பகையரசர் தலையிலேயே கங்கை நீர் நிரம்பிய குடங்களை ஏற்றிக்கொண்டு திரும்பியிருக்கிறான். வெற்றியோடு மீண்ட மாதண்ட நாயகனை கோதாவரிக் கரையில் சந்தித்து அழைத்து வருகிறான் ராஜேந்திரன். கங்கை கொண்ட வீர ராஜேந்திரன் கங்கை கொண்ட சோழன் என்று பெயர் பெறுகிறான். அவன் அமைத்த நகரம் கங்கை கொண்ட சோழபுரம் ஆகிறது. அங்கு அமைத்த கோயில் கங்கை கொண்ட சோழீச்சுரம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கங்கை கொண்ட வெற்றியைக் கூறுகிறது அவனது மெய்க்கீர்த்தி ஒன்று.

தொடுகடல் சங்குகொடு அடல்மகி பாலனை வெஞ்சமர் வளாகத்து அஞ்சுவித்து அருளி
ஒண்திறல் யானையும் பெண்டிர்பண் டாரமும்
நித்தில நெடுங்கடல் உத்தரலாடமும்
வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கை
மாப்பொரு தண்டால் கொண்ட
கோப்பரகேசரி வர்மரான
உடையார் இராஜேந்திர சோழதேவர்

என்பதுதான் மெய்க்கீர்த்தி.