பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/261

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

259

பெரிய திருஉரு உடையவரே. அபிஷேகம் முதலியன் செய்யப் பெரிய கிராதி கட்டவேண்டியிருக்கிறது. கருவறையில் வெளிச்சம் காணாது. நன்றாகத் தீப அலங்காரம் செய்தால் கோலாகலமான காட்சியாக இருக்கும். இந்தப் பெருஉடையாரை, சோழீச்சுரத்தானை வணங்கிய பின்பே,

அன்னமாய் விசும்பு பறந்து
அயன்தேட, அங்ஙனே
பெரியநீ! சிறிய
என்னையாள விரும்பி
என்மனம் புகுந்த எளிமையை
என்றும் நான் மறக்கேன்,

என்று திருவிசைப்பா பாடியிருக்கிறார் கருவூர்த்தேவர். நாம் அந்த இசைப்பாவைப் பாடிக்கொண்டே கிழக்கு நோக்கி நடந்து மகா மண்ட்பத்தைக் கடக்கலாம். பெரியமண்டபம்; அதற்கேற்ற தூண்கள், கலை அழகு ஒன்றும் இல்லை. செப்புப் படிமங்கள் பல இருட்டில் புதைந்து கிடக்கும். அவற்றையெல்லாம் தேடிப்பிடித்தே காணவேண்டும். இருட்டோடு இருட்டாக ஈசான மூலையிலே ஒரு சிலை. அதனை நவக்கிரஹம் என்பர். ஒரு சதுரமான கல். அதன் எட்டு மூலைகளிலும் எட்டுக் கிரஹங்கள். மேல் தளத்தில் ஒரு மலர்ந்த பதுமம். பக்கத்தில் ஏழு குதிரைகள் இழுக்கும் பாவனை. அதனை ஓட்டும் அருணன் என்றெல்லாம் அமைந்திருக்கும். நவக்கிரஹ அமைப்பில் இது ஒரு புதிய முறை. தவறாமல் பார்க்கவேண்டியதொன்று. கோயிலுள் பார்க்க வேண்டியவை இவைகளே.

இனி வெளிச்சுற்றுக் கோயில்களையும் பார்க்கலாம். விநாயகர், மஹிஷமர்த்தினி, சண்டீசர், அம்பிகை சந்நிதிகள் எல்லாம் தனித்தனி. இங்குள்ள விநாயகர் கணக்க விநாயகர் என்ற பெயருடன் விளங்குகிறார். இந்தப் பெரிய கோயில கட்டும் பொறுப்பை ஓர் அமைச்சரிடம் ராஜேந்திர சோழன்