பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/274

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

வேங்கடம் முதல் குமரி வரை

அங்க அடையாளங்களைச் சொல்லி, 'அவள் கோயிலினுள் இருக்கிறாளா?' என்று கேட்கிறான். அவர்களோ, 'இல்லையே' என்கிறார்கள். பின்னர் அவர்கள் 'சரி' அந்தப் பெண்ணின் பெயர் என்ன? என்று கேட்டால், 'தெரியாதே' எனக் கையை விரிக்கிறான். இப்படியெல்லாம் பலமணிநேரம் நின்ற கவிஞனின் ஆதங்கம் எல்லாம் ஒரு பாட்டாக வருகிறது. பாட்டு இதுதான்:

'இல்' என்பார் தாம் அவரை,
யாம் அவர்தம் பேர் அறியோம்;
பல் என்று செவ்வாம்பல்
முல்லையையும் பாரித்து,
'கொல்' என்று காமனையும்
கண்காட்டி, கோபுரக்கீழ்
'நில்' என்று போனார் என்
நெஞ்சை விட்டுப் போகாரே!

பட்டிக்காட்டுக் கவிஞன் பாட்டில், 'கோபுரக்கீழ் நில்' என்று நிறுத்திவைத்து விட்டு, கோயிலுள் சென்று மறைந்த கணிகை, அவள் வரவுக்காக ஏங்கி நிற்கின்ற கவிஞன் எல்லோரையுமே பார்க்கிறோம். ஆம்! இந்தப்பாட்டைப் பாடியவன் கவிச்சக்கரவர்த்தி கம்பன்தான். பட்டிக்காட்டுக் கவிஞன் இதயதாபத்தை நன்கு புரிந்து கொண்டல்லவா பாடியிருக்கிறான். இப்படித் தாபத்தோடு நிற்கிற கவிஞனைப்போல் சோழப் பிரமஹத்தி ஒரு கோயில் வாயிலில் காத்துக் கிடக்கிறது எத்தனையோ வருஷங்களாக. அது காத்துக்கிடக்க நேர்ந்த கதைக்கு இரண்டு உருவம். ஒன்று வரகுணபாண்டியனைப்பற்றி. மற்றொன்று சோழன் அஞ்சத்துவசனைப்பற்றி. மதுரையிலிருந்து அரசாண்ட வரகுணபாண்டியன் குதிரை ஏறி வருகிறான். வழியில் அயர்ந்து கிடந்த பிராமணன் ஒருவன் மீது குதிரை இடற, அதனால் பிராமணன் இறக்கிறான். இந்தத் தவறுக்காக,