பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/280

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

வேங்கடம் முதல் குமரி வரை

பாவிலும், பட்டினத்தார் மும்மணிக் கோவையிலும் பாடியிருக்கிறார்கள். இன்னும் அந்தாதி, உலா, கலம்பகங்கள் எல்லாம் உண்டு. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளும் அனந்தம். சுமார் 50 கல்வெட்டுகளுக்கு மேல் உண்டு. மிகப் பழைய கல்வெட்டுகள் மதுரை கொண்ட கோப்பரகேசரி வர்மனுடையதாகும். 1200 ஆண்டுகளுக்கு முன்னமேயே சிவன் திருக்கோயில் உள்ளிடத்தைப் புதுப்பித்திருக்கிறான் இவன். இன்னும் இங்கு ஒரு சண்பகத் தோட்டம் அமைத்து அதனைத் திருவேங்கடப் பிச்சியான் தன் மேற்பார்வையில் வைத்திருந்தான் என்றும் கூறுகின்றது. இங்கு ஒரு நாடக சாலையமைத்து அதில் பண்ணும், பரதமும் நடந்திருக்கின்றன. அந்த நாடகசாலையே இன்று கல்யாண மண்டபமாக அமைந்திருக்கின்றது. பாடல்பாட, விளக்கெரிக்க எல்லாம் நிபந்தங்கள் பல ஏற்பட்டி ருக்கின்றன. இவற்றை விரிக்கில் பெருகும். இந்தக் கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தின் மேற்பார்வையில் இருக்கிறது. சமீபத்தில் நால்வர் மண்டபம் முதலிய திருப்பணிகள் செய்திருக்கிறார்கள் ஆதீனத்தார்.

திருவாவடுதுறை ஆதீனம் என்றதும், அன்று அங்கு ஆதீன கர்த்தர்களாக இருந்து தமிழ் வளர்த்த மகா சந்நிதானத்தின் பெருமைகள் எல்லாம் ஞாபகத்துக்கு வரும். ஆதலால் நேரமும் காலமும் உடையவர்கள் ஏழுஎட்டு மைல் வடகிழக்காக நடந்து அங்குள்ள மாசிலாமணி ஈசுவரர், ஒப்பிலா முலையாள் இருவரையும் தரிசித்து விட்டே திரும்பலாம். இங்கிருந்துதான் திருமூலர் திருமந்திரம் எழுதியிருக்கிறார். அவரது கோயில், அவர் தங்கியிருந்த அரசடி முதலியவற்றையும் வணங்கலாம். அத்தலத்தில் இறைவனை நந்தி பூஜித்தார் என்பது வரலாறு. கல்லால் சமைக்கப்பட்டிருக்கும் நந்தி பெரிய உரு. செப்புச் சிலை வடிவில் இருக்கும் நந்தியும் அழகானவர். இத்தலத்துக்கு