பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/289

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

287

அந்தக் கன்னி யாரென்று கவிஞன் கூறவில்லை. அந்தக் கன்னியே இரண்டு உருவில் இங்கு வந்து நிற்கிறாளோ என்று தோன்றும். இக்கன்னியர் இருவரும் சரபர் சந்நிதியில் நிற்பானேன்? சரபரைத் தரிசிக்கும்போது ஏற்படும் அச்சம் எல்லாம் நீங்கவும், திரும்பும்போது உள்ளத்திலே ஒரு கிளுகிளுப்பை ஊட்டவுமே இவர்களை இங்கு நிறுத்தி வைத்திருக்க வேணும். சிற்பி செதுக்கிய சாதாரணக் கற்சிலைகள் அல்ல அவை, உயிர் ஓவியங்கள். சரபரையோ இல்லை, கம்பகரேசுரரையோ கண்டு வணங்கக் கருத்து இல்லாத கலைஞர்கள்கூட இப்பெண்களைக் காண இத்திரி புவனத்துக்கு ஒரு நடை நடக்கலாம். அதன் மூலமாக, அழகை ஆராதனை செய்யத் தெரிந்து கொள்ளலாம்.

கலைதானே பக்தி வளர்க்கும் பண்ணை . இந்தப் பெண்களைப் பார்த்த கண்களை அங்கிருந்து அகற்றுவது கடினம்தான். என்ன செய்வது? வீடுவாசல், மக்கள் சுற்றம் என்றெல்லாம் இருக்கிறார்களே, அவர்களை நினைக்க வேண்டாமா? ஆதலால் வேண்டா வெறுப்போடு வெளியே வரலாம். வீடும் திரும்பலாம்.

இக்கோயில் எழுந்த வரலாற்றைத்தான் முன்னமேயே பார்த்துக் கொண்டோமே. இன்னும் பல விபரங்கள் தெரிய வேண்டுமென்றால் கல்வெட்டு ஆராய்ச்சி ஒன்று நடத்த வேண்டியதுதான். இந்தக் கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுந்தது. அங்குள்ள ஏழு கல்வெட்டுக்கள் எத்தனை எத்தனையோ கதைகளைச் சொல்லுகின்றன. கல்வெட்டுக்களில் இறைவன் திரிபுவனமுடையார், திரிபுவன ஈசுவரர், மகாதேவர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். இங்குள்ள கல்வெட்டுக்களில் பேசப்படும் பெருமக்கள் ஜடாவர்மன்