பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

வேங்கடம் முதல் குமரி வரை

இட நெருக்கடியை உண்டு பண்ணுகிறார். இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வந்து கூடவே நிற்கும் ஆள் யார் என்று தெரியவில்லை. விளக்கு போட்டுப் பார்க்கவும் முடியவில்லை . முன் வந்த மூவரும் சிறந்த பக்தர்கள். ஆகவே, அவரவர்கள் எண்ணத்தில் எழுந்ததை, ஆளுக்கு பாட்டாக பாடுகிறார்கள். முதலில் வந்த பொய்கையாரும், இரண்டாவது வந்த பூதத்தாரும், ஞானச் சுடர் விளக்கை ஏற்றுகிறார்கள், தங்கள் தங்கள் பாட்டால். மூன்றாவது வந்த பேயரோ, நான்காவது ஆளாக வந்து நெருக்கும் நபர் யாரென்று கண்டுபிடித்து விடுகிறார். அதைச் சொல்கிறார்.

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்-செருக்கிளரும்
பொன்ஆழி கண்டேன் புரி சங்கம் கண்டேன்
என் ஆழி வண்ணன்பால் இன்று

என்ற அழகான பாட்டில். ஆம்! மூன்று பக்தர்கள் கூடிய இடத்தைவிட வந்து இருந்து கொள்ள வேறு நல்ல இடம் அந்தப் பரந்தாமனுக்குக் கிடைக்கவா போகிறது? இப்படிப் பெருமானை நெருக்கத்திலே கண்ட மூவர் வேறு யாருமில்லை. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்பவர்கள் தான். இவர்களையே தமிழ் உலகம் முதல் ஆழ்வார்கள் என்று போற்றி வழிபடுகிறது. இந்த நிகழ்ச்சி நடந்த இடம் தான் திருக்கோவலூர் என்ற தலம். இந்தக் கோவலூரை உள்ளடக்கிய அந்த நாட்டையே,

பாவரும் தமிழால் பேர்பெறு
பனுவல் பாவலர் பாதிநாள் இரவில்
மூவரும் நெருக்கி மொழிவிளக்கு
ஏற்றி முகுந்தனைத் தொழுத நன்னாடு

என்று பாரதம் பாடிய வில்லிபுத்தூரார் குமாரர் வரந்தருவார் புகழ்ந்து பாடுகிறார்.