பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

அப்படி பெரிய நோக்கம் ஒன்றை அடிப்படையாக வைத்துக் கொண்டு நான் இந்தக் கட்டுரைகளை எழுதவில்லை தலவரலாறுகளைப் படிப்பவர்கள் உள்ளத்தில் ‘நாம் இந்தக் கோயிலைப் போய்ப் பார்க்கவேண்டும்' என்ற ஆவலை இக்கட்டுரைகள் தூண்டுமானால், அது போதும் என்றே கருதுகிறேன் நான். மேலும் கோயில், குளம், மூர்த்தி, தீர்த்தம் இவைகளைக் காணச் செல்லும் அன்பர்கள் அங்குள்ள சிற்பச் செல்வங்களையும் கண்டு மகிழத் தெரிந்து கொண்டார்கள் என்றால் அதைவிட மகிழ்ச்சி தருவது வேறு ஒன்றும் இல்லை, கட்டுரைகளைப் படிக்கிறவர்கள், பாராட்டுகிறவர்களில் பெரும்பாலோர் பெண்கள். எங்கள் தலைவர் ரஸிகமணி அவர்கள் சொல்கிறபடி பக்தி, பண்பாடு எல்லாம் அவர்களிடம்தானே இன்றும் நிலைத்து நிற்கிறது தமிழ் நாட்டில். இவர்கள் காட்டும் அன்பும் ஆதரவுமே தெம்புதருகிறது மேலும் மேலும் தொடர்ந்து எழுத. அவர்களுக்கு எல்லாம் என் நன்றியும் வணக்கமும்.

இந்த இரண்டாவது புத்தகத்திலே தருமபுரம் ஆதீனத்தார் கோயில்கள் பல இடம் பெற்றிருக்கின்றன. அக்கோயில் நிர்வாகத்தைத் திறம்பட நடத்துகிறவர்கள் ஆதீன கர்த்தர் குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகபராமாச்சார்ய சுவாமிகள், என்னிடம் மிக்க அன்புடையவர்கள் அவர்கள். அவர்களுக்கு இந்நூலைச் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

புத்தகம் வெளிவருவதில் ஆர்வம் காட்டிய அன்பர்கள், புத்தகத்தை அழகாக அச்சிட்டுக் கொடுத்த பிரசுரகர்த்தர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, இக்கட்டுரைகளைத் தொகுத்து புத்தக உருவில் வெளியிட அனுமதி தந்த 'கல்கி' ஆசிரியர் எல்லோருக்கும் என் அன்பும் நன்றியும்.

'சித்ரகூடம்'
திருநெல்வேலி-6
தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்
14.1.61